ஈரோடு மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின பயணிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடத்தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு,
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 நாட்களாக நடந்த இந்த போராட்டம் நேற்று முன்தினம் இரவு முடிவுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் நேற்று அதிகாலை முதலே ஓடத்தொடங்கின. டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வழக்கம்போல வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பஸ்களை ஓட்டிச்சென்றனர். இதனால் பஸ்நிலையங்களில் வழக்கமான பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதிகாலையில் இருந்தே பஸ்கள் அனைத்தும் இயங்க தொடங்கியதால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் உற்சாகத்துடன் பஸ் நிலையங்களில் குவிந்தனர். குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களுக்கும் செல்ல வேண்டிய பொதுமக்கள் காலை முதலே தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.
இதுபற்றி பெண் பயணி ஒருவர் கூறியதாவது:–
நான் ஈரோட்டில் வேலை செய்து வருகிறேன். பொங்கல் பண்டிகைதோறும் மதுரை அருகே உள்ள சொந்த கிராமத்துக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கலுக்கு ஊருக்கு செல்ல தயாராக இருந்தபோது அரசு பஸ்கள் ஓடாத நிலை ஏற்பட்டது. ஓரிரு நாட்களில் போராட்டம் முடிந்து விடும் என்று நினைத்தால் அது தொடர்ந்து நடந்ததால், இந்த ஆண்டு ஊருக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வியிலேயே இருந்தேன்.
இந்த நிலையில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் விடுமுறை ஒரு நாளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டதால், அவர்களும் ஊருக்கு செல்ல ஆர்வமாக இருந்தார்கள். வேலை நிறுத்த போராட்டம் நடந்ததால் எப்படி செல்வது என்ற கவலையில் இருந்தேன். ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், உடனடியாக பஸ்கள் ஓடத்தொடங்கி விட்டது. குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் உடனடியாக ஊருக்கு புறப்பட்டு விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் ஏராளமானவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வெளியூர்களுக்கு சென்றனர். இதனால் ஈரோடு பஸ்நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
ஈரோடு மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் சேனாதிபதியிடம் கேட்டபோது, ‘ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட 13 பணிமனைகளில் இருந்தும் 100 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. அதுபோல் அனைத்து பணியாளர்களும் வேலைக்கு வந்து உள்ளனர். எந்த பிரச்சினையும் இல்லாமல் போக்குவரத்து முழுமையாக நடக்கிறது’ என்றார்.