மு.க.ஸ்டாலின் சமத்துவ பொங்கல் விழாவை மக்களுடன் கொண்டாடினார்


மு.க.ஸ்டாலின் சமத்துவ பொங்கல் விழாவை மக்களுடன் கொண்டாடினார்
x
தினத்தந்தி 13 Jan 2018 5:10 AM IST (Updated: 13 Jan 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் மு.க.ஸ்டாலின் மக்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் கிராமத்தில் உள்ள டி.டி.சி. நகர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். குன்றத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளரும், முன்னாள் ஆதனூர்–கரசங்கால் ஒன்றிய கவுன்சிலருமான மலர்விழி தமிழ்அமுதன், ஆதனூர் ஊராட்சி செயலாளர் டி.தமிழ்அமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டார். அவர் சமத்துவ பொங்கல் விழாவை ஆதனூர் கிராம மக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.

விழாவையொட்டி நடந்த பரத நாட்டியம், மயிலாட்டம், புலி ஆட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் ஆகியவற்றை மு.க.ஸ்டாலினும், துர்கா ஸ்டாலினும் ரசித்துப்பார்த்தனர். பின்னர் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

ஆதனூர் ஊராட்சியில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பள்ளி கட்டிடம், ரே‌ஷன் கடை, சிமெண்டு சாலை மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 402 வீடுகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் செல்லும் இடம் எல்லாம் மக்கள் என்னிடம் இந்த ஆட்சியை எப்போது அகற்றுவீர்கள் என்ற கேள்வியை கேட்கின்றனர்.

அவர்கள் எதிர்பார்ப்பு மிகவிரைவில் நிறைவேறும். கடந்த 10 நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த அரசு நிதி பற்றாக்குறை என்று கூறி அவர்களுக்கு தரவேண்டிய வைப்பு தொகையினை தர நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்படிப்பட்ட அரசு எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தை 100 சதவீதமாக உயர்த்தி வழங்க மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதைப்பற்றி எல்லாம் இந்த அரசு கவலைப்படவில்லை. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வழிகளை மட்டும் யோசித்து வருகிறது.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ கூடிய விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது தை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டாக சட்டம் நிறைவேற்றப்படும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலினுக்கு ஆதனூர் ஊராட்சி செயலாளர் டி.தமிழ்அமுதன், குன்றத்தூர் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மலர்விழி தமிழ்அமுதன் ஆகியோர் வெள்ளி வீரவாள் பரிசாக வழங்கினர்.

பின்னர் ஏழை–எளிய மக்கள் 5 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசுகளை அவர் வழங்கினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story