கொட்டாம்பட்டி அருகே டிராக்டர் மீது கார் மோதல், 3 பேர் பலி
கொட்டாம்பட்டி அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
கொட்டாம்பட்டி,
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளாலபட்டியை சேர்ந்தவர் ராஜா(வயது 37). டிரைவர். இவர் நேற்று இரவு சின்னக்கொட்டாம்பட்டியில் இருந்து டிராக்டரில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக கரும்பு ஏற்றிகொண்டு மேலூர் நோக்கி சென்றார். அப்போது மதுரை அருகே உள்ள செக்கானூரணியை சேர்ந்த காண்டிராக்டர் மோகன்(50) தனது குடும்பத்தினருடன் காரில் சமயபுரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய சென்றுவிட்டு மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை அசோக்(25) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில் வந்தபோது ராஜா ஓட்டி வந்த டிராக்டர் மீது மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த அசோக், டிராக்டர் டிரைவர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் டிராக்டரில் வந்தவர்கள், காரில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் காரில் வந்து விபத்தில் சிக்கிய பேச்சியம்மாள் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.
மேலும் விபத்தில் சிக்கிய பிச்சையம்மாள், ராமாயி, மோகன், ராமு, கொடியரசி உள்பட 9 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக டிராக்டரில் இருந்த கரும்புகள் சாலை முழுவதும் பரவிக்கிடந்தன. இதனால் திருச்சி–மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.