உலகின் ‘நடுநடுங்க வைக்கும்’ பகுதிகள்
உலகில் குளிரால் நடுநடுங்க வைக்கும் பகுதிகள் பல இருக்கின்றன. அவற்றில் பல, ரஷியாவில் அமைந்திருக்கின்றன. அந்த நகரங்களின் சிறப்பு என்ன தெரியுமா?
ரஷியாவில் இருக்கும் ஒரு சிறிய நகரம் ஒய்மியாகோன். உலகில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் குளிரான இடங்களில் முதலிடம் வகிப்பது இந்நகரம்தான். இதன் மொத்த மக்கள்தொகை 500 மட்டுமே.
ஒய்மியாகோனில் ஆண்டின் சராசரி வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் என்பதால் வருடம் முழுவதும் இங்கே குளிர் வாட்டி எடுக்கும். அதிலும் 1933-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வெப்பநிலை மைனஸ் 67.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு செய்யப்பட்டது.
அது பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைவான வெப்பநிலை. இங்கு இருக்கும் ஹீட்டிங் பிளான்ட் எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும்.
இந்நகரத்தில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்பட்டால் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் உறைந்து விரிசல்கள் ஏற்பட்டுவிடும் என்பதால் இங்கு மின் தடையே ஏற்படாதவாறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரஷியாவில் இருக்கும் இன்னொரு குளிர் நகரம், யாகுட்ஸ்க். 1891-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பதிவான மைனஸ் 64.4 டிகிரி செல்சியஸ்தான் இங்கு பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை ஆகும்.
இங்கு மழை பெய்யும் மாதங் களில் மட்டும் வெப்பநிலை சற்று அதிகரிக்கும். 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 2 லட்சத்து 69 ஆயிரம் ஆகும்.
இந்த நகரில் ஒரு விமான நிலையமும் செயல்பட்டுவருகிறது. ஆனால் கடுங்குளிர் காரணமாக இந்த ஊரில் மக்கள் நடமாட்டத்தை அதிகம் காண முடியாது.
மக்கள் நிரந்தரமாக வசிக்கும் குளிரான இடங்களிலேயே பரப்பளவில் பெரியதாக விளங்கும் நகரம், நார்சிலிக்.
இங்கு நிரந்தரமாக வாழும் மக்கள் மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர். இங்கு தொழிற்சாலை ஊழியர்கள், குறுகிய காலம் தங்கிச் செல்பவர்கள் என சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நார்சிலிக்கில் குளிர்கால வெப்பநிலை சராசரியாக மைனஸ் 55 டிகிரி செல்சியசாக இருக்கும். இந்நகரம் ஒரு காலத்தில் தூய்மையான இடமாக இருந்தது.
ஆனால் இப்பகுதியில் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இங்கு அதிகமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அவற்றால் வருடம் முழுவதும் வெளியேற்றப்படும் புகையாலும், இதரக் கழிவுகளாலும் நகர்ப்புற சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது உலகின் அதிகம் மாசடைந்த இடங்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது நார்சிலிக் நகரம்.
மேலே குறிப்பிட்ட ரஷிய நகரங் களைப் போலவே போர்ட் குட் ஹோப்பும் குளிரில் உறையவைக்கும் நகரம்தான். ஆனால் மற்ற இடங்களைப் போல குட் ஹோப் நகரின் நிலை அவ்வளவு மோசமாக இல்லை. சாதாரண நாட்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதில்லை.
ஆனால் குளிர்காலங்களில் வெப்பநிலை குறைந்தே காணப்படும். 1917-ம் ஆண்டு ஒருநாள் வெப்பநிலை மைனஸ் 56.1 டிகிரி செல்சியஸ் என பதிவு செய்யப்பட்டிருக் கிறது.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி குட் ஹோப் நகரில் 515 பேர் மட்டுமே குடியிருக்கின்றனர். மக்கள் குறைவான எண்ணிக்கையில் வசித்தாலும் இந்த ஊரில் இரண்டு வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன, தபால் சேவையும் கிடைக்கிறது. இது தவிர 2013-ம் ஆண்டில் இங்கு 4 ஜி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story