ஒன்றாக மருத்துவம் பயிலும் அதிசய சகோதரிகள்!
அதிசயங்கள் கற்பனையில்தான் நடக்கும் என்பவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்தபின் அக்கருத்தை மாற்றிக்கொள்ளக்கூடும்.
கர்நாடக மாநிலத்தில், உடன் பிறந்த 3 சகோதரிகள், ஒன்றாக மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
ஸ்வேதா, ஸ்வாதி, ஸ்ருதி என்று அவர்கள் பெயர்களின் முதல் எழுத்து ஒன்றாக இருப்பதைப் போல, ஒரே ‘பேட்ச்’சில் மருத்துவம் பயிலும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். அதுவும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பறையில் அடுத்தடுத்து அமர்ந்து மருத்துவம் பயின்று வருகிறார்கள்.
அறிவும், அதிர்ஷ்டமும் இவர்களுக்குக் கைகொடுத்திருக்கும் என்று சொல்ல நினைப்பவர்கள் ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரிகளின் கடின உழைப்புதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது.
பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் தந்தை சங்கர் ஒரு செவிலியர். தான் டாக்டர் ஆகாவிட்டாலும் தனது மகள்கள் மூவரையும் டாக்டர் ஆக்கியே தீருவது என்ற உறுதியுடன் சங்கர் உழைத்துவந்தார். அதற்காக, உறவினர்கள், தெரிந்தவர்கள் மத்தியில் அவர் எதிர்கொண்ட கேலி, கிண்டலும் ஏராளம்.
மருத்துவராகும் பயணத்தில் சகோதரிகள் தடுமாறியபோது அந்தச் சீண்டல்கள் உச்சம் பெற்றன. ஆனால் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் சங்கரும் அவரது புதல்விகளும் தமது இலக்கில் முனைப்பாக இருந்தனர்.
இந்தச் சகோதரிகளில் மூத்தவர், ஸ்வேதா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிளஸ் 2-வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்றபோதும், எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்குத் தகுதி பெறவில்லை. எனவே வீட்டிலேயே இருந்து மருத்துவ நுழைவுத்தேர்வுக்குப் படித்துவந்தார். 2015-ல் மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் 11,200-வது ரேங்க் பெற்றவருக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.
எனவே ஸ்வேதா மறுபடியும் முயற்சிக்க முடிவு செய்தார். 2016-ல் ஸ்வேதா, பிளஸ் 2-வில் 91 சதவீத மதிப்பெண்கள் பெற்ற தனது சகோதரி ஸ்வாதியுடன் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு எழுதினார்.
அதில் ஸ்வேதாவுக்கு கிடைத்த ரேங்க் 5200, ஸ்வாதி பெற்றது 6800. அதுவும் மருத்துவக் கல்லூரிக்குள் காலடி வைக்கப் போதவில்லை.
“எங்களுக்குச் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் நாங்கள் எங்கள் முயற்சியை விட்டுவிடவில்லை” என்கிறார், ஸ்வேதா.
ஆனால் இதற்கிடையில், ‘நீட்’ வந்துவிட, தங்களால் அதில் வெற்றி பெற முடியுமா என்று சகோதரிகள் கவலைகொண்டனர்.
எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதும் அவர்களின் லட்சியம். ‘நீட்’ தேர்வுக்குப் பயந்தால், எப்படி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதப் போகிறோம் என்று தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் சகோதரிகளில் இளையவரான ஸ்ருதியும் பிளஸ்-2 முடித்துவிட்டார். அவர் பெற்ற மதிப்பெண் சதவீதம் 91.3.
மூவரும், பெங்களூருவில் உள்ள ஒரு ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தனர். கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் ஸ்வேதா 1216, ஸ்வாதி 1413, ஸ்ருதி 750 ரேங்க் பெற்றனர்.
இவர்கள் பெல்லாரியைச் சேர்ந்தவர்கள் ஆகையால், தங்கள் ஊரில் உள்ள விஜயநகர் மருத்துவ அறிவியல் கல்லூரியைத் தமது முதல் விருப்பமாகத் தேர்வு செய்திருந்தனர். ஆனால் ‘நீட்’ அகில இந்தியத் தேர்வு என்பதால், தங்களுக்கு ஒரே கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றுகூட நினைக்கவில்லை.
அந்த ஆச்சரியம் நடந்தபோது, குடும்பத்தினருக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லையாம். அப்பா சங்கரும் அம்மா நிர்மலாவும் ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கின்றனர்.
“மருத்துவக் கல்லூரியில் இடம்பெறும் முயற்சியில் எனது மகள்கள் பின்னவுடைகளைச் சந்தித்தபோதெல்லாம், எங்கள் உறவினர்கள் ‘ஏன் இப்படி இவர்கள் கஷ்டப்படுகிறார்கள்?’ என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் நான் சிறிதும் சஞ்சலம் அடையவில்லை. என் மகள்களும் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிப்பார்கள் என்பதில் தீர்மானமாக இருந்தேன். அது இன்று நடந்துவிட்டது. ஒரு காலத்தில் பொருளாதார நிலை காரணமாகத்தான் மருத்துவம் படிக்க முடியாமல் நான் செவிலியர் படிப்பில் சேர்ந்தேன். ஆனால் ஒரு மெடிக்கல் சீட்டுக்குப் பதிலாக இன்று 3 சீட்டுகள் கிடைத்துவிட்டன” என்று பெருமிதத் தந்தையாகக் கூறுகிறார், சங்கர்.
ஸ்வேதா, ஸ்வாதி, ஸ்ருதி ஆகிய மூவரும் ஒரே கல்லூரியில், ஒரு வகுப்பில் மட்டுமல்ல, மூவரின் பெயரும் ஆங்கில எழுத்து ‘எஸ்’-ல் தொடங்குவதால் ஒன்றாகவே அமரும் வாய்ப்பையும் பெற்றிருக்கின்றனர். ஒரு ‘செட்’ புத்தகத்தையே சகோதரிகள் மூவரும் பகிர்ந்துகொள்கின்றனர்.
சகோதரிகளுக்கான மருத்துவக் கல்வி கட்டணம் ரூ. இரண்டரை லட்சத்தை, தான் சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு அவர்களின் தாத்தா செலுத்தியிருக்கிறார்.
தங்களின் அசாதாரண சாதனையால் மருத்துவப் படிப்பை முடிப்பதற்கு முன்பே புகழ்பெற்றுவிட்ட இந்தச் சகோதரிகள், உருக்குலையாத உழைப்பின் வெற்றிக்கு உதாரணமாக உள்ளனர்.
Related Tags :
Next Story