அடிமைகளை மீட்கப் போராடிய அதிரடி வீரன்
மிகப்பெரிய படையுடன், பலத்துடன் விளங்கிய ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்க்க சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தான், ஸ்பார்டகஸ்.
மனிதர்களை மனிதர்களே அடிமைகளாக வைத்திருக்கும் பழக்கம் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவிக்கிடந்தது. ரோம் நகரில் இந்தக் கலாசாரம் கொஞ்சம் தீவிரமாக இருந்தது. பொன், பொருளை வைத்திருப்பதைப் போல, அதிக அடிமைகளை வைத்திருப்பதையும் கவுரவமாக கருதியவர்கள் அங்கு நிரம்ப இருந்தனர்.
மாட மாளிகைகளை கட்டுவதற்காகவும், தோட்டம் வயல்களை பராமரிப்பதற்காகவும், சொல்லும் வேலையை சொன்னபடி செய்யவும், தங்களை புகழ்ந்து கவிபாடவும் அந்த அடிமைகளை செல்வச்செழிப்பு மிகுந்த பலரும் பயன்படுத்தினர். மேலும் சிலர் தங்களை எதிர்க்க நினைப்பவர்களிடம் வாதங்கள் செய்வதற்கும், போர்புரிவதற்கும் கூட, தாங்கள் விலை கொடுத்து வாங்கியவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.
அப்படி விலைக்கு வாங்கப்பட்டவர்களில் ஒருவன் தான், ஸ்பார்டகஸ் (Spartacus).
தற்போது பல்கேரியாவாக உருவகம் கண்டிருக்கும், அப்போதைய திரேஸ் நாட்டில் பிறந்தவன் ஸ்பார்டகஸ். அவனது போதாத காலம் ரோம் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, அடிமையாக விற்பனை செய்யப்பட்டான். திடகாத்திரமான வலிமை மிகுந்த அவனது உடலைக் கண்டு, ரோம் நகர செல்வந்தர்கள் அதிசயித்தனர். அவனை மற்றவர்களைப் போல சில்லறை வேலைகளுக்குப் பயன்படுத்த அவர்களுக்கு விருப்பம் இல்லை. அவனை ஒரு அடிமை போர் வீரனாக வளர்த் தெடுக்க முடிவு செய்து, கேப்புவா என்ற இடத்தில் இருந்த போர் பயிற்சிக் கூடத்தில் சேர்த்து விட்டனர்.
போர்ப் பயிற்சி அளிப்பதால், அவனை தங்கள் நாட்டின் போர்ப்படையில் சேர்ப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. அப்படியென்றால் என்ன செய்வார்கள் என்று கேட்பவர்கள், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் சண்டைக்காட்சியை நினைத்துக் கொள்ளுங்கள்.
போர்ப் பயிற்சி முடித்த அனைவரும் திறந்தவெளி மைதானத்தில் பயங்கர ஆயுதங்களைத் தாங்கி ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ள வேண்டும். அப்படி கொடூரமாக மோதிக்கொண்டு அவர்கள் சாவதைக் கண்டு அங்குள்ள மக்கள் கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். சில நேரங்களில் இந்த அடிமைப் போர் வீரர்கள் மோதிக்கொள்ளும் மைதானத்தில், நாட்டில் கொடூர குற்றம் செய்த குற்றவாளிகளும் இறக்கிவிடப்படுவதுண்டு.
ஸ்பார்டகசுக்கு இப்படி அடிமைகளை எதிர்த்து சண்டையிட விருப்பமில்லை. அவன், அடிமைத்தனத்தின் அடிப்படையை எதிர்த்து போரிட விரும்பினான். அவனோடு சக அடிமைகளாக இருந்த எழுபது பேரோடு அங்கிருந்து தப்பினான். ‘எப் படியும் போகப்போகும் உயிர்.. நம்முடைய உரிமையை மீட்டெடுப்பதில் போகட்டுமே’ என்ற முழக்கத்தை ஸ்பார்டகஸ் முன் வைத்தான். இதனால் அடிமைகளாக இருந்தவர்கள் அவன் பக்கம் வந்தனர். அனைவருக்கும் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. அவனது படைபலம் பெருகியது. அனைவரும் ஸ்பார்டகஸை தலைவனாக ஏற்றுக்கொண்டனர்.
மிகப்பெரிய படையுடன், பலத்துடன் விளங்கிய ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்க்க சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தான், ஸ்பார்டகஸ். கி.மு. 73-ல் மவுண்ட் வெசுவியஸ் என்ற இடத்தில் போர் ஆரம்பமானது. ‘நம்மிடம் அடிமையாக இருந்தவர்கள் தானே, அவர்களை எளிதில் அடக்கி விடலாம்’ என்று நினைத்த ரோம் ராணுவத்திற்கு, தங்களின் எண்ணம் தவறு என்பது, போர் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே தெரிந்து விட்டது. ஒவ்வொரு நாளும் அடிமைகளின் படை வலிமை அதிகரிப்பதை ரோம் ராணுவம் உணர்ந்தது. ரோம் ராணுவம் எதிர்பார்த்ததை விடவும், அதிக நாட்கள் போர் நீண்டது. ‘எவ்வளவு நாட்கள்?’ என்கிறீர் களா.. சுமார் 3 ஆண்டுகள்.
போர் இத்தனை காலம் நீளக் காரணம், ஸ்பார்டகஸ் தன்னுடைய படைகளை திறமையாக வழிநடத்தியது தான். தன்னுடைய படைகளில் ஒரு வீரன் மடிந்து விழுந்தால் கூட, அந்த இடத்தை ஈடு செய்ய உடனடியாக அங்கு ஒரு வீரன் நியமிக்கப்பட்டான். போரின் தொடக்கத்தில் தங்களிடம் ஆயுதம் இல்லாததால், தங்களைப் பிணைத்து வைத்திருந்த சங்கிலிகளையே ஆயுதங்களாக பயன்படுத்தினர். போர் தொடங்கி, ஸ்பார்டகஸ் படை முன்னேறத் தொடங்கியதும், வழி நெடுகிலும் அகப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டு தங்களின் தாக்குதல்களை இன்னும் தீவிரப் படுத்தினர்.
தங்கள் அடிமைகளாக இருந்தவர்களின் ஆக்ரோசமான போர் முறையைக் கண்டு, ரோம் ராணுவம் திகைத்துப்போனது. அதே நேரம் அதுவரை அடிமையாக இருந்தவர் களின் வீரிய எழுச்சியால், தங்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதைக் கண்டு, அவர்களைச் சுரண்டி வாழ்ந்த செல்வந்தர்கள் அச்சம் கொண்டனர். அந்த பெரும் செல்வந்தர்களில் ஒருவனான லிசினியஸ் கிராசஸ் என்பவன், ஸ்பார்டகஸையும், அவனது படைகளையும் அழிக்கும் பொறுப்பை ஏற்றான். கிராசஸ், வழியெங்கும் தன்னுடைய படைகளால், அடிமைகளை கொன்றபடி ஸ்பார்டகஸுடன் போரிட முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்.
கி.மு. 71-ம் ஆண்டு லுவாமியா என்ற இடத்தில் நடந்த போரில், முதல் வரிசையில் நின்று போரிட்ட ஸ்பார்டகஸ், படுகாயம் அடைந்து வீழ்ந்தான். அதே நேரம் ரோம் ராணுவத்தின் போர் வீரர் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருந்ததால், ஸ்பார்டகஸ் படை வீரர்களால் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அந்த கடைசிக்கட்டப் போரின் முடிவில், ஓரிடத்தில் குவிந்து கிடந்த வீரர்களோடு, வீரனாக ஸ்பார்டகஸும் இறந்து கிடந்தான்.
கி.மு. 109-71-ல் வாழ்ந்த ஸ்பார்டகஸ் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் குறைவாகவே கிடைத் திருக்கின்றனவாம். கிடைத்தப் பதிவுகளும் கூட முரண்பாடான தகவல்களையே தருகின்றது. அந்தப் பதிவுகளின் படி ஒரு சாரார் ஸ்பார்டகஸ் போரில் வீரர்களோடு, வீரராக இறந்து கிடந்தான் என்றும், மற்றொரு சாரார் அவனது உடல் கிடைக்கவில்லை என்றும் சொல்கின்றனர். அதே நேரம் அவன் சிறந்த போர் வீரன், அடிமைகளை மீட்டெடுக்கப் போராடியவன் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக பதிவிடுகிறார்கள். ஸ்பார்டகஸ் வாழ்க்கையை மையமாக வைத்து ஹாலிவுட்டில் தொலைக்காட்சி தொடரும் தயாரிக்கப்பட்டிருக் கிறது.
போர் முடிந்து.. ஸ்பார்டகஸ் இறந்துவிட்டான் என்பதை உறுதி செய்த ரோம் ராணுவம், ஸ்பார் டகஸ் ஏற்படுத்தி வைத்திருந்த முகாமுக்குச் சென்றது. அங்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் ரோம் வீரர்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்ற ஒரு செய்தியே.. ஸ்பார்டகஸ் எப்படிப்பட்ட வீரியம் மிக்க அதிரடி வீரன் என்பதை பறைசாற்றும்.
Related Tags :
Next Story