நாசரேத்தில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு


நாசரேத்தில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Jan 2018 2:45 AM IST (Updated: 13 Jan 2018 7:15 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிகம்பம் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாசரேத்,

நாசரேத்தில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிகம்பம் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலைமறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொடிக்கம்பம் அகற்றம்

நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் அருகில் கடந்த 11–ந் தேதி நள்ளிரவில் இந்து முன்னணி அமைப்பின் கொடிக்கம்பத்தை சிலர் நட்டினர். நேற்று முன்தினம் காலையில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது படம் வைத்து விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனுமதியின்றி கொடிகம்பம் நடப்பட்டுள்ளதாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கொடிகம்பம் அகற்றப்பட்டது. தொடர்ந்து இந்து முன்னணி பிரமுகரை ஒரு தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

அவர், சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணி நகர தலைவர் வெட்டும்பெருமாள் அளித்த புகாரின்பேரில், நாசரேத்தைச் சேர்ந்த ராஜேஷ், மாணிக்கம், செல்வகுமார், சாமுவேல், ராஜ், ஜெயபால், குட்டி ஆகிய 7 பேர் மீது நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று அனுமதியின்றி கொடிக்கம்பம் நட்டியதாக, கிராம நிர்வாக அலுவலர் தேசிகன் அளித்த புகாரின்பேரில், இந்து முன்னணி நகர தலைவர் வெட்டும்பெருமாள் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சாலைமறியல்

இந்த சம்பவத்தை கண்டித்து ஒரு தரப்பினர் நாசரேத் புனித லூக்கா ஆஸ்பத்திரி முன்பிருந்து ஊர்வலமாக போலீஸ் நிலையம் செல்ல முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆஸ்பத்திரி முன்பாக திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமாதான பேச்சுவார்த்தை

பின்னர் நாசரேத் போலீஸ் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ், முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் மாமல்லன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீசார் கூறுகையில், இதேபோன்று எதிர் தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்படும். அதுவரையிலும் யார் மீதும் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story