இளம்பெண் சுருதியிடம் அமெரிக்க என்ஜினீயர் உள்பட மேலும் பலர் பணத்தை இழந்ததாக புகார்


இளம்பெண் சுருதியிடம் அமெரிக்க என்ஜினீயர் உள்பட மேலும் பலர் பணத்தை இழந்ததாக புகார்
x
தினத்தந்தி 14 Jan 2018 5:30 AM IST (Updated: 14 Jan 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் சுருதியிடம், அமெரிக்காவில் பணியாற்றும் என்ஜினீயர் உள்பட மேலும் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து விட்டதாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். எனவே சுருதி உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுருதி (வயது21) என்பவர், வெளிநாட்டில் வேலை பார்க்கும் என்ஜினீயர்கள் உள்பட பலரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கோடிக் கணக்கில் பணத்தை கறந்தார். முகநூலிலும் கவர்ச்சிப்படங்களை பதிவு செய்து இளைஞர்களை கவர்ந்தார். சேலத்தை சேர்ந்த என்ஜினீயர் பாலமுருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுருதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பல வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சுருதி பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில், முதல்கட்ட விசாரணையில் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு படித்த, வசதியான வாலிபர் களை குறிவைத்து பணத்தை பறித்தது தெரியவந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து தங்க, வைர நகைகள், ரொக்க பணம், சொகுசு கார், ரூ.4 லட்சத்துக்கும் அதிகமான மேக்அப் செட்டுகள், ஆடம்பர ஆடைகள், விலை உயர்ந்த 16 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுருதி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் பாஸ்போர்ட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சுருதி வெவ்வேறு பெயர்களில் வாலிபர்களிடம் பேசி மயக்கியது தெரியவந்தது. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் படித்த இளைஞர்களிடம் சுருதி சரளமாக ஆங்கிலத்தில் பேசியதை நம்பி ஏமாந்த இளைஞர்கள் பணத்தை லட்சக்கணக்கில் வாரிக்கொடுத்துள்ளனர். அதைக்கொண்டு சுருதி குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா, நட்சத்திர ஓட்டலில் அறை, சொகுசு கார் என்று ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.

இவரிடம் 8 பேர் மட்டும் மொத்தம் ரூ.1½ கோடி அளவுக்கு பணத்தை இழந்ததாக ஏற்கனவே புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் விசாரணையில் மேலும் பல இளைஞர்கள் சுருதியிடம் பணத்தை இழந்து உள்ளனர். ஆனால் தாங்கள் ஏமாந்தது வெளியே தெரிந்தால் தங்களுக்கு தான் அவமானம் என்று கருதி புகார் கொடுக்காமல் விட்டுள்ளனர்.

ஆனாலும் போலீசார் சுருதியிடம் இருந்து கைப்பற்றிய 16 செல்போன்களில் அவர் யார், யாரிடம் பேசினார்? என்ற பட்டியலை தயாரித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் சுருதியுடன் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்துள்ளனர். அதோடு சுருதியிடம் ஏமாந்ததாக புகார் கொடுத்த இளைஞர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோவையை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அவரையும் சுருதி ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. என்ஜினீயர் கோவையில் உள்ள தனது அண்ணன் மூலம் சுருதி மீது புகார் செய்துள்ளார்.

இதுபோல் நெல்லையை சேர்ந்த என்ஜினீயர் இசக்கிமுத்து என்பவர் சுருதியிடம் ரூ.3 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளதாக போலீசில் புகார் மனு அளித்துள்ளார். மற்றொரு பட்டதாரி வாலிபரும் புகார் மனு அளித்துள்ளார்.

சுருதியிடம் ஏமாந்த வாலிபர் ஒருவர் கூறும்போது, ‘இணையதளத்தில் திருமணத்திற்கு பெண் தேடுவதை அறிந்த சுருதி செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்டார். முதலில் நட்பாக பேசி பழகிய அவர், பின்னர் காதல் வலையை விரித்து திருமணம் செய்வதாக கூறினார். பின்னர் குடும்ப செலவு, மருத்துவ செலவு என்று கூறி பல தவணைகளில் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டினார். ஒரு கட்டத்தில் சந்தேகப்பட்டு அவரிடம் கேட்ட உடன் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். அப்போதுதான் அவர் ஏமாற்று பேர்வழி என தெரியவந்தது’ என்றார்.

திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் பணத்தை மோசடி செய்த சுருதி குறித்து புகார்கள் குவிகிறது. எனவே சுருதி உள்பட 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

Next Story