அறுவை சிகிச்சை செய்த போது 4½ வயது சிறுவனின் சிறுநீரகத்தில் துணி, பஞ்சு வைத்து தைத்ததாக புகார்


அறுவை சிகிச்சை செய்த போது 4½ வயது சிறுவனின் சிறுநீரகத்தில் துணி, பஞ்சு வைத்து தைத்ததாக புகார்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:00 AM IST (Updated: 14 Jan 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த போது, துணி, பஞ்சை வைத்து தைத்ததாக டாக்டர்கள் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை,

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சண்முகபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). என்ஜினீயர். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகன் விஷ்ணு (வயது4½) வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தான். இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் கோவை ராம்நகர் விவேகானந்தா ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இடது பக்க சிறுநீரகம் சிறியதாக உள்ளதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் எனது மகனுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் 11 நாட்கள் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு சரியாகி விட்டதாக கூறி வீட்டிற்கு அனுப்பினர். ஆனால் எனது மகனுக்கு வயிற்று வலி சரியாக வில்லை. தொடர்ந்து நடக்க முடியாமலும், சிறுநீர் கழிக்க முடியாமலும் சிரமப்பட்டு வந்தான்.

எனவே நாங்கள் மீண்டும் அதே ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது எனது மகனின் சிறுநீரகம் வீங்கி இருப்பது தெரிய வந்தது. இது பற்றி டாக்டர்களிடம் கேட்ட போது, மருந்து மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும் என்று கூறி அனுப்பி வைத்து விட்டனர். அதன் பின்னரும் சரியாக வில்லை.

இதையடுத்து வேறு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது சிறுநீரகம் அருகே துணி மற்றும் பஞ்சு இருப்பது தெரிய வந்தது. எனது மகனுக்கு முதலில் அறுவை சிகிச்சை செய்த கோவை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கவனக்குறைவாக அறுவை சிகிச்சையின் போது துணி, பஞ்சை உள்ளே வைத்தது தெரிய வந்தது. உடனே அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள், எனது மகனின் சிறுநீரகத்தில் இருந்த துணி, பஞ்சு ஆகியவற்றை அகற்றினர்.

நான் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலில் அறுவை சிகிச்சை செய்தபோது ரூ.20 லட்சம் செலவு செய்துள்ளேன். எனவே எனது மகனுக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த கோவையை சேர்ந்த 3 டாக்டர்கள் மீது மருத்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறான மருத்துவ சிகிச்சை, மனஉளைச்சல், மருத்துவ செலவு ஆகியவற்றுக்காக சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோர முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புகார் மனு மீது போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story