அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்கில் நலத்திட்ட உதவித்தொகை சேர நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டர் உத்தரவு


அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்கில் நலத்திட்ட உதவித்தொகை சேர நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2018 4:00 AM IST (Updated: 14 Jan 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்கில் நலத்திட்ட உதவித்தொகை சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருவூல அலுவலர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்,

கருவூலம் வழியாக பொதுமக்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்ட உதவித்தொகைகள் சில தவறான வங்கி கணக்கு எண்களாலும், நடப்பில் இல்லாத வங்கி கணக்குகளாலும் சில பயனாளிகளுக்கு சென்றடையாமல் திரும்ப கருவூலத்திற்கே அனுப்பப்பட்டு வருகின்றன.

இப்பிரச்சினை தொடர்பான கருவூல அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை அளிக்க பயனாளியிடம் வங்கி கணக்கு விவரங்களை பெறும்போது குறைகள் இல்லாத வகையில் ஆய்வு செய்து அதை உறுதி செய்து கொள்வதோடு பயனாளியின் வங்கி கணக்குடன் ஆதார் எண், பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்கம் மற்றும் நடப்பு மாதத்தின் கடைசி நடவடிக்கையின் பதிவு செய்யப்பட்ட பக்கத்தின் நகலை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இனி எந்தவொரு பயனாளிகளும் விடுபடாமல் நலத்திட்ட உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் தவறாமல் சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பொதுமக்களும் வங்கி கணக்கு எண், ஆதார் எண், பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் நடப்பில் உள்ளதா? என்று வங்கிக்கு சென்று சரிபார்த்து சமீபத்திய பதிவை வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்து அதன் நகலை நலத்திட்ட உதவிகளை வழங்கும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story