மக்களின் வாழ்வில் எல்லா வளமும் பொங்கட்டும் நாராயணசாமி பொங்கல் வாழ்த்து


மக்களின் வாழ்வில் எல்லா வளமும் பொங்கட்டும் நாராயணசாமி பொங்கல் வாழ்த்து
x
தினத்தந்தி 14 Jan 2018 5:30 AM IST (Updated: 14 Jan 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் வாழ்வில் எல்லா வளமும், நலமும், அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித் துள்ளார்.

புதுச்சேரி,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பண்டைய காலத்தில் இருந்தே நாகரிகத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். தம்முடைய கலாசாரத்தை காக்கவும், சமுதாயத்தில் ஒற்றுமையை பேணவும் திங்கள்தோறும் திருவிழாக்களை கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினர். இத்திருநாட்களில் உறவுகளோடும், சுற்றத்தோடும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை நடத்தினர்.

அத்தகைய தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருநாள் பொங்கல் திருநாளாகும். ஆடிப்பட்டம் தேடிவிதைத்து கண்ணும் கருத்துமாய் வளர்ந்த நெற்பயிரின் அறுவடை திருநாளாகும் இந்த பொங்கல் திருநாள். நம் அனைவருக்கம் உணவிடும் உழவர்களுக்கும் உழவு தொழிலுக்கு உதவிடும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளாகும். தைத்திங்கள் முதல் நாளில் உலகின் சக்திக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் கதிரவனுக்கும் நன்றி தெரிவிக்கும் அற்புத திருநாள்.

பழைய கழிந்து புதியன புகும் வேளையாக அனைவருக்கும் இந்த தைத்திருநாள் விளங்கவேண்டும் என்பது என் ஆவலாகும். பழைய பகையினையும், கசப்பான அனுபவங்களையும் மறந்து புதிய சிந்தனையோடு ஏற்றத்தை நோக்கி பீடுநடை போடும் உள்ளம் கொண்டு வாழ்வில் வளம் கொழிக்க இந்த தைத்திங்கள் முதல் நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட, நம் புதுச்சேரி அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசினை வழங்குகிறது. மக்களின் மகிழ்ச்சியினை உறுதிசெய்யும் அரசின் நடவடிக்கையை தடுக்க நினைத்தவர்களின் முட்டுக்கட்டையை போகி தீயிலிட்டு பொசுக்கி மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்கவைத்துள்ளது உங்களின் புதுச்சேரி அரசு. இந்த வெற்றி பொங்கல் இனி எல்லாவற்றிலும் தொடரும் என்பதில் ஐயமில்லை.

கால்நடைகளையும் தெய்வமாக தொழுபவர்கள் தமிழர்கள். மாட்டுப்பொங்கல் தினத்தன்று அவற்றிற்கும் பொங்கலிட்டு நன்றி செலுத்தும் நல்லெண்ணம் கொண்டவர்கள் தமிழர்கள். நாம் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும், வீரத்தையும் அறியாத வீணர் கூட்டமொன்று நம்மை விலங்குகளை வதைப்பவர்களாக சித்தரித்து நம்முடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை தடை செய்தனர்.

அந்த முட்டுக்கட்டையினை எதிர்த்து நம்முடைய இளைஞர்களும், பெண்களும் நடத்திய போராட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர்களின் போராட்டத்துக்கு தலைவணங்கி, அந்த தடையையும் சட்டசபையில் சட்டம் இயற்றி வெற்றிகரமாக உடைத்தெறிந்து நம் பண்பாட்டினை மீட்டெடுத்தது உங்களின் புதுச்சேரி அரசு.

இத்தகைய வீணர்களை அடையாளம் கண்டு அவர்களை விரட்டியடிக்க வேண்டும். நம்முடைய கலாசாரம், நம்முடைய அடையாளம் மட்டுமல்ல பெருமையும்கூட. இந்த தைப்பொங்கல் திருநாளில் புதுச்சேரி மக்களின் வாழ்வில் வளமும், நலமும், அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கிட வேண்டும் என வேண்டி அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story