புகை மூட்டத்தால் விபத்து: பஸ்-வேன் மோதலில் ஒருவர் பலி


புகை மூட்டத்தால் விபத்து: பஸ்-வேன் மோதலில் ஒருவர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2018 3:45 AM IST (Updated: 14 Jan 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் எதிரே வந்த பஸ் தெரியாமல் அதன் மீது வேன் மோதியது. இதில் வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பழைய இரும்பு கடை நடத்திவருபவர் வைரம். கடையில் தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த மைக்கேல் (வயது 28) என்பவர் அங்கேயே தங்கி மினிவேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மைக்கேல் நேற்று அதிகாலை அந்த வேனில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூரில் உள்ள வாடிக்கையாளருக்கு சென்று வழங்கினார்.

அங்கு அதை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் கனகம்மாசத்திரம் நோக்கி சென்றுகொண்டு இருந்தார். வேன் திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் கனகவள்ளிபுரம் அருகே வந்துகொண்டு இருந்தபோது போகி பண்டிகை காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு புகை மூட்டமாக காணப்பட்டது.

அப்போது எதிரே திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ் மீது அந்த வேன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் இரு வாகனங்களின் முன் பகுதியும் நொறுங்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேன் டிரைவர் மைக்கேல் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அரசு பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் காயமின்றி தப்பினார்கள். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story