ரெயில்களில் பயணிகளிடம் நகை பறித்த வட மாநில கொள்ளையன் கைது


ரெயில்களில் பயணிகளிடம் நகை பறித்த வட மாநில கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 14 Jan 2018 3:45 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் நகை பறித்த வடமாநில கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை,

சென்னையிலிருந்து ஈரோடு சென்ற ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், திருப்பதியிலிருந்து பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் கடந்த மே மாதம் பயணிகளிடம் மர்மநபர்கள் நகைகளை பறித்து விட்டு தப்பினர். 2 ரெயில்களிலும் நகைகளை பறிகொடுத்த ஈரோட்டை சேர்ந்த சாந்தி, பெங்களூருவை சேர்ந்த உஷா ஆகியோர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையரை பிடிப்பதற்காக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, கோவை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், ஏட்டுகள் சிவானந்தம் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை ரெயில்நிலையங்களில் செயல்படும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த அன்று ரெயிலில் ஏறிய மற்றும் இறங்கியவர்களை பார்வையிட்டு கொள்ளையனை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒருவன் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். பழைய குற்றவாளிகளின் படங்களையும் வைத்து ஒப்பிட்டதில் சம்பந்தப்பட்ட நபர் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த முத்தம்பட்டேல் (வயது 33) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை போலீசார் தேடி வந்தனர். அவர் உத்தரபிரதேச மாநிலம் சாமாலியா என்ற இடத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் உள்ளூர் ரெயில்வே போலீசார் உதவியுடன் முத்தம்பட்டேலை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதே ஊரில் உள்ள நண்பரிடம் இவர் திருடிய நகைகளை கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து முத்தம்பட்டேலை போலீசார் கைது செய்து அவரது நண்பரிடம் இருந்து 38 கிராம் நகைகளை மீட்டனர். பின்னர் முத்தம்பட்டேலை ஜோலார்பேட்டைக்கு கொண்டு வந்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் வைத்தனர். 

Next Story