களை கட்டியது பொங்கல் பண்டிகை மண்பானை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வாங்க அலைமோதியது கூட்டம்


களை கட்டியது பொங்கல் பண்டிகை மண்பானை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வாங்க அலைமோதியது கூட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:00 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பொங்கல் பண்டிகை களை கட்டியது. தித்திக்கும் செங்கரும்பு, மஞ்சள் கொத்து, மண்பானை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருச்சி,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை பெண்கள் எழுந்து வாசலில் கோலமிட்டு செங்கரும்புகளால் முக்கோணம் போல அமைத்து அடுப்பு வைத்து அதில் பொங்கல் பானை வைத்து, மஞ்சள் கொத்துகளை கட்டி, புத்தரிசியோடு வெல்லம், நெய், ஏலக்காய், உலர் திராட்சை, முந்திரி ஆகியன சேர்த்து பொங்கி வந்தவுடன், ‘பொங்கலோ, பொங்கல் என்று குரல் எழுப்பி சூரிய பகவானை வணங்கி உற்சாகமாக கொண்டாடுவர். இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திருச்சி காந்தி மார்க்கெட், சத்திரம் பஸ் நிலையம் மற்றும் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் செங்கரும்புகள் கட்டுக்கட்டாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. 10 எண்ணிக்கை கொண்ட கரும்பு ஒரு கட்டு ரகத்திற்கு ஏற்றாற்போல் ரூ.250 முதல் ரூ.400 வரை விற்பனை ஆனது.

மண்பானை

அதே போன்று மஞ்சள் கொத்துகள், வாழைப்பழங்கள், தேங்காய், மண்பானைகள் ஆகியவையும் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை திருச்சி மாநகர் மக்கள் மட்டும் இன்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து வாங்கி சென்றனர்.

இதேபோன்று பொங்கலுக்கு தேவையான காய்கறிகளும், உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், மண்பானை போன்றவையும் காந்தி மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. இவற்றை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் காந்தி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நேற்று பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று திருச்சியில் ஏராளமான பொது மக்கள் குவிந்ததால் பொங்கல் பண்டிகை களை கட்டியது என்றே சொல்லலாம். கூட்ட நெரிசலில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நேற்று மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பஸ் நிலையங்கள்

இதே போன்று பண்டிகையை கொண்டாட நேற்று அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ள மன்னார்புரம், வில்லியம்ஸ் சாலை ஆகிய இடங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் சிரமம் இன்றி செல்ல போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் திருச்சியில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் நேற்று காலை முதல் இரவு வரை பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story