ஈரோடு மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்


ஈரோடு மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:16 AM IST (Updated: 14 Jan 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களுடைய உரிமங்களை புதுப்பிக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமங்கள் மற்றும் உரிமைதாரரது விவரங்கள் அனைத்தும் தேசிய படைக்கல உரிமங்களுக்கான தரவு தள மென்பொருளில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேற்படி படைக்கல உரிமங்கள் குறித்த பதிவுகள் மேற்கொள்ளாத படைக்கல உரிமைதாரர்களுக்கு வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை பதிவு செய்வதற்கு மத்திய அரசால் இறுதி வாய்ப்பாக கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

எனவே துப்பாக்கி உரிமைதாரர்கள் தங்களது உரிமத்தினை பதிவு செய்யாமல் இருப்பின், அசல் படைக்கல உரிமம், இருப்பிட முகவரிக்கான ஆதாரம், பாஸ்போர்ட் அளவுள்ள ஒரு போட்டோ மற்றும் பான்கார்டு ஆகியவற்றின் அசல் பிரதிகளுடன் வருகிற மார்ச் மாதம் 24-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘சி’ பிரிவில் (குற்றவியல்) ஒப்படைத்து, படைக்கல உரிமத்தினை தேசிய தரவு தளத்தில் பதிவு செய்து தனி அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்படி விவரங்களை அளிக்காவிட்டால் உரிமங்கள் தேசிய படைக்கல உரிமங்களுக்கான விவரங்கள் தரவு தள மென் பொருளில் பதிவாகாமல் காலாவதியாக நேரிடும்.

மேலும் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் மேற்படி உரிமங்கள் அனைத்தும் செயலற்றதாக ஆகிவிடும். எனவே இந்த இறுதி வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் இறந்த படைக்கல உரிமைதாரர்களது வாரிசுதாரர்கள், உரிமத்திற்கான படைக்கலன்களை உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களிலோ அல்லது உரிமம் பெற்ற அலுவலக மையத்திலோ ஒப்படைக்கவேண்டும்.

அப்போது அசல் உரிமம், வாரிசு சான்று, இறப்பு சான்று ஆகியவற்றுடன் ரத்து செய்ய கோரும் விண்ணப்பத்தினை உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். தவறும் பட்சத்தில் படைக்கலச்சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார். 

Next Story