ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 5 பேர் பலி 2 பேரை தேடும் பணி தீவிரம்


ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 5 பேர் பலி 2 பேரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:29 AM IST (Updated: 14 Jan 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மும்பை,

மும்பை ஜூகு விமான தளத்தில் இருந்து நேற்று காலை 10.14 மணிக்கு பவன் ஹான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டாவுபின் என்-3 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. அதில் ஒத்கார், கடோச் என்ற 2 விமானிகளும், ஓ.என்.ஜி.சி. (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) ஊழியர்களான சரவணன், சீனிவாசன், ஜோஸ் ஆண்டனி, பங்கஜ் கார்க் மற்றும் பிந்துலால் பாபு ஆகியோரும் இருந்தனர்.

மொத்தம் 7 பேருடன் சென்ற இந்த ஹெலிகாப்டர், புறப்பட்டு 10 நிமிடங்கள் வரை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதன் பிறகு ஹெலிகாப்டர் உடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

அந்த ஹெலிகாப்டர் காலை 11 மணிக்கு கடலின் நடுவே பாம்பே ஹையில் உள்ள எண்ணெய் கிணறு பகுதியில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் 11 மணி ஆகியும் ஹெலிகாப்டர் அங்கு செல்லவில்லை. ஹெலிகாப்டர் பற்றிய தகவலும் இல்லை. எனவே, ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்கலாம் என கருதிய அதிகாரிகள், ஹெலிகாப்டரை மும்பை கடல் பகுதியில் தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.

ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஐ.என்.எஸ். டெக் போர்க்கப்பலும், கடற்படைக்கு சொந்தமான விமானங்களும் ஈடுபட்டன. இதில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கடலில் மேற்பகுதியில் காணப்பட்டன. இதன் மூலம் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, கடலில் விழுந்தது உறுதியானது.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேர் கடலில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இருவரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Next Story