பொங்கல் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினர்


பொங்கல் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினர்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:47 AM IST (Updated: 14 Jan 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

அருமனையில் நடந்த பொங்கல் விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் ஆகியார் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அருமனை,

அருமனை வட்டார இந்து சமுதாய மக்கள் மற்றும் ஆலய கமிட்டிகள் சார்பில் பொங்கல் விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலையில் கலாசார ஊர்வலமும், இரவு பொதுக்கூட்டமும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

குமரி மாவட்டத்தை இந்தியாவில் முதன்மை மாவட்டமாக உயர்த்தும் அளவுக்கு திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். இதுவரை சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

மேம்பாலம்

குமரி மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை ரூ.150 கோடியில் அமைய உள்ளது. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.

மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பால பணிகள் ஜூலை மாதத்தில் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்படும். அத்துடன் கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாதவன் நாயர்

தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பேசியதாவது:-

பொங்கல் விழா இயற்கையை போற்றும் விழாவாக உள்ளது. இயற்கையையும், இயற்கை விவசாயத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பெண்களுக்கு தையல் எந்திரம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஏழைகளுக்கு வேட்டி, சேலை போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அருமனை பா.ஜனதா தலைவர் மோகன்தாஸ், அனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story