ஒகி புயலில் இறந்து கேரளாவில் கரை ஒதுங்கிய மீனவரின் உடல் அடையாளம் தெரிந்தது


ஒகி புயலில் இறந்து கேரளாவில் கரை ஒதுங்கிய மீனவரின் உடல் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 14 Jan 2018 4:47 AM IST (Updated: 14 Jan 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் இறந்து கேரளாவில் கரை ஒதுங்கிய கடியப்பட்டணம் மீனவரின் உடல் அடையாளம் தெரிந்தது.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30–ந் தேதி ஒகி புயல் வீசியது. இதில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் பலரது உடல்கள் கேரளாவில் கரை ஒதுங்கின.

இந்த உடல்கள் கேரளாவில் உள்ள  அரசு ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பிணங்கள் அழுகிய நிலையில் உள்ளதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டி.என்.ஏ. பரிசோதனை மூலம் பிணங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரது உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

கடியப்பட்டணம் மீனவர்

இந்தநிலையில், கடியப்பட்டணம் தோமையார் தெருவை சேர்ந்த டெல்பின் ராஜ் (வயது49) என்பவரின் உடல் அடையாளம் தெரிந்துள்ளது. அவரது உடல் கேரள மாநிலம் மலப்புரம் அருகே திருவூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் கண்டறிந்த டாக்டர்கள், டெல்பின்ராஜ் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இறந்த டெல்பின் ராஜ்க்கு மேரி இந்திரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story