கடலில் படகு கவிழ்ந்து 3 மாணவிகள் சாவு 5 பேரின் கதி என்ன?


கடலில் படகு கவிழ்ந்து 3 மாணவிகள் சாவு 5 பேரின் கதி என்ன?
x
தினத்தந்தி 14 Jan 2018 4:47 AM IST (Updated: 14 Jan 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் அருகே கடலில் படகு கவிழ்ந்து 40 மாணவ-மாணவிகள் தண்ணீரில் மூழ்கினர். இதில், 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 5 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

மும்பை,

பால்கர் மாவட்டம் தகானு பர்னாக்கா பகுதியில் உள்ள போன்டா பள்ளிக்கூடம் மற்றும் ஜூனியர் கல்லூரியை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் நேற்று காலை அங்குள்ள தகானு கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது, தனியார் படகில் கடலுக்குள் உற்சாகமாக சவாரி சென்றனர். இந்த நிலையில், திடீரென படகு கவிழ்ந்தது. இதனால், அதில் இருந்த மாணவர்கள் அனைவரும் அலறி துடித்தனர்.

தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உதவிக்காக அபயக்குரல் எழுப்பினர். தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், படகுகளில் சம்பவ இடத்தை நோக்கி விரைந்தனர். உள்ளூர் மீனவர்களும், கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதில், 32 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

அதே வேளையில், 3 மாணவிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களது உடல்களை கடற்படையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் தகானு அம்பேத்கர் நகரை சேர்ந்த சோனல் (வயது 17), ஜான்வி (17) மற்றும் சன்ஸ்குருதி மாயவன்ஷி (17) என்பது தெரியவந்தது. அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதனிடையே, கடலில் மூழ்கிய 5 பேரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகர சங்கராந்தியையொட்டி, தகானு கடலில் படகு கவிழ்ந்து மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story