தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெட்டி கடைக்காரரை தாக்கிய போலீசாரை கண்டித்து மறியல்


தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெட்டி கடைக்காரரை தாக்கிய போலீசாரை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 16 Jan 2018 4:45 AM IST (Updated: 16 Jan 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக பெட்டிக்கடைக்காரரை போலீசார் தாக்கினர். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொண்டி,

திருவாடானையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் கோனேரிகோட்டை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி. நேற்று முன் தினம் மாலை இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன், ஏட்டு பால்சாமி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு 32 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு சுப்பிரமணியை அழைத்துள்ளார். அப்போது சுப்பிரமணி வரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன், சுப்பிரமணியை தாக்கியுள்ளார்.

இதனை பார்த்த அவரது உறவினர்களும், பொதுமக்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் சுப்பிரமணியை போலீஸ் ஜீப்பில் ஏறுமாறு கூறி மீண்டும் போலீசார் அவரை தாக்கியுள்ளனர். இதனால் பொதுமக்களும், உறவினர்களும் போலீசாரை கண்டித்து ஜீப்பை முற்றுகையிட்டதுடன், தொண்டி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேசுவரி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் அளித்த புகாரின் பேரில் கோனேரிகோட்டை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி, ராசு, முத்தையா, ஆறுமுகம், ராமநாதன், மகாலிங்கம் ஆகியோர் மீது திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Next Story