விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி


விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 16 Jan 2018 4:00 AM IST (Updated: 16 Jan 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மேலும் பக்கத்து வீட்டிலும் கைவரிசை காட்ட முயன்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கண்ணன் (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவைக்கு சென்றுவிட்டார். இதேபோல் இந்த வீட்டின் அருகில் வாடகைக்கு குடியிருக்கும் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான அமுலரசி (60) என்பவரும் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இதையறிந்த மர்ம நபர்கள், நள்ளிரவில் கண்ணன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து பார்த்தனர். ஆனால் அதில் நகை- பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்மநபர்கள், அருகில் இருக்கும் அமுலரசி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததால் உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதனால் அமுலரசி வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளைபோகாமல் தப்பியது.

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்த 2 வீடுகளிலும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story