குடிப்பதற்கு பணம் தராததால் தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது


குடிப்பதற்கு பணம் தராததால் தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 16 Jan 2018 4:30 AM IST (Updated: 16 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

குடிப்பதற்கு பணம் தராததால் தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு ராயப்பபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). இவருடைய மனைவி ஜோதி லட்சுமி (53). இவர்களுக்கு தீப்ஸ்வரூப் (27) என்ற மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.மகள் திருமணம் முடிந்து தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஜோதி லட்சுமியும் தனது மகளுடன் அமெரிக்காவில் உள்ளார்.

செல்வராஜூக்கு அதேப் பகுதியில் 2 வீடு உள்ளதால் அதை வாடகைக்கு விட்டு அதில் வரும் வாடகையை வைத்து வாழ்ந்து வந்தார். டிரைவர் வேலைக்கு சென்று வந்த தீப்ஸ்வரூப் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்வது கிடையாது என்று கூறப்படுகிறது. இருவருக்கும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரி கிறது. இருவரும் மது அருந்த மகிழ்ச்சியாக அமர்வதும் போதை ஏறியதும் தகராறு செய்வதும் இவர்களது வாடிக்கையாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தீப்ஸ்வரூப் கத்தியை எடுத்து தனது தந்தை என்றும் பார்க்காமல் அவருடைய கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வராஜை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீப்ஸ் வரூப்பை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

சிறுவயதில் இருந்தே எனது மீது தந்தை அதிகளவில் பாசம் வைத்து இருந்தார். நான் டிரைவர் வேலைக்கு சென்றாலும், நாம் வீடு வாடகைக்கு விட்டு இருப்பதால் அதில் இருந்து கிடைக்கும் வருமானமே நமக்கு போதும். நீ டிரைவர் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். இதனால் நான் வேலைக்கு செல்லவில்லை. நான் கேட்கும் நேரத்தில் எனக்கு பணம் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் நான் குடிப்பதற்காக பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் இல்லை என்று கூறினார். ஆனால் அவர் வைத்திருக்கும் மணிபர்சில் பணம் வைத்திருந்தார். ஏன் பணம் இல்லை என்று கூறுகிறீர்கள் என்று கேட்டேன்.

இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் எனது தந்தை என்றும் பார்க்காமல் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் தீப்ஸ்வரூப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story