பவானி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைக்க நடவடிக்கை, கலெக்டர் தகவல்


பவானி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைக்க நடவடிக்கை, கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Jan 2018 4:15 AM IST (Updated: 16 Jan 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி மக்கள் பயன்பெறும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

ஊட்டி,

கோத்தகிரி தாலுகாவுக் குட்பட்ட கல்லாம்பாளையம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை சார்பில் ஆதிவாசி மக்களுக்கு வன உரிமைக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின் படி, ஆதிவாசி மக்கள் 67 பேருக்கு வன உரிமைகளுக்கான ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊட்டியில் கடந்த 30-ந் தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 479 பயனாளிகளுக்கு வன உரிமை ஆணை வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் தற்போது வன உரிமை பெறும் இப்பகுதியை சேர்ந்த 67 பயனாளிகளும் அடங்குவர். உங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரிடையாக அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கூடுதல் பஸ் வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பரிசீலனை செய்து கூடுதல் பஸ்களை இயக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

தெங்குமரஹாடா பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிக்கான குடிநீர் குழாய்கள் விரைவில் அமைத்து தரப்படும். கல்லாம்பாளையம் முதல் மேலூர் வரை புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த பகுதி சமவெளி என்பதால், இங்கு மட்டும் அந்த தடை விலக்கி கொள்ளப்படுகிறது. பவானி ஆற்றை கடந்து தான் ஆதிவாசி மக்கள் பஸ் ஏற வந்து செல்கின்றனர். எனவே ஆதிவாசி மக்கள் பயன்பெறும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

அங்குள்ள சோதனைச்சாவடி பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் உள்ளூர் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதனை சீர்செய்ய ஈரோடு வன அலுவலர்களுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். பழங்குடியினர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி நன்றாக படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கலெக்டர் ஆதிவாசி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், சாந்திராமு எம்.எல்.ஏ., மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கலைமன்னன், கீழ்கோத்தகிரி வனச்சரகர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வன உரிமை ஆணை குறித்து அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் குடியிருந்து வரும் ஆதிவாசிகள் இதுவரை தாங்கள் வசிக்கும் இடத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்தனர். அந்த இடத்தில் அரசு மூலம் வீடு கட்டவோ, மின் இணைப்பு பெறவோ முடியாத சூழ்நிலை காணப்பட்டது. மத்திய அரசின் வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கிராம சபை மூலம் ஆதிவாசிகளுக்கு தங்களது வீடு மற்றும் நிலத்துக்கான உரிமை வழங்கும் வன உரிமை ஆணை மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆதிவாசி மக்கள் வீடு கட்டி மின் இணைப்பு பெறலாம். தங்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை எளிதாக பெறலாம் என்று கூறினார்கள். 

Next Story