பொங்கல் விடுமுறை, குடியரசு தினத்தையொட்டி மதுரை கோட்டம் சார்பில் 30 சிறப்பு ரெயில்கள் இயக்கம்


பொங்கல் விடுமுறை, குடியரசு தினத்தையொட்டி மதுரை கோட்டம் சார்பில் 30 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 9:13 PM GMT)

பொங்கல் விடுமுறை, குடியரசுதினத்தையொட்டி 30 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா கூறியதாவது:-

பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் போது பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்கும் வகையில் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, மதுரை-ராமேசுவரம் உள்ளிட்ட பாசஞ்சர் ரெயில்களில் 24 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. மதுரை-செங்கோட்டை வழித்தடத்தில் 6 சிறப்பு ரெயில்களும், திண்டுக்கல்-பழனி மார்க்கத்தில் 6 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன.

கடந்த 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரெயில்களால் மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், விருதுநுகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணிகள் பயனடைந்தனர். அத்துடன், அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன. 8 பறக்கும்படை டிக்கெட் பரிசோதகர்கள் குழு அமைக்கப்பட்டு, பயணிகளுக்கு சிரமமின்றி டிக்கெட் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

இது போன்ற நெருக்கடியான நேரங்களில் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தரப்பில் பயணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பொங்கல் விடுமுறை மற்றும் குடியரசுதின விடுமுறைக்காக மதுரை கோட்டத்தில் மட்டும் 30 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story