பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் பலி


பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் பலி
x
தினத்தந்தி 16 Jan 2018 5:00 AM IST (Updated: 16 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் வீரர்கள் அடக்கினர். மாடு முட்டியதில், ஜல்லிக்கட்டை பார்க்க வந்த வாலிபர் ஒருவர் பலி ஆனார்.

மதுரை,

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவுக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். அதன்படி அங்குள்ள மஞ்சமலை ஆறு திடலில் நேற்று காலை 8.25 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் பல காளைகள் வீரர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு துள்ளிக்குதித்து ஓடின.

மாடுபிடி வீரர்களில் பலர் காளைகளின் திமிலை பிடித்து மடக்கினர். அவர்களை பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். சில காளைகள் வாடிவாசலில் இருந்து சிறிது தூரம் சென்று பின்பு மீண்டும் திரும்பி வந்தன.

இதைப் பார்த்த வீரர்கள் அந்த காளைகளிடம் இருந்து தப்பிக்க தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்றனர். சில காளைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரையும் விரட்டின. இன்னும் சில காளைகள் வீரர்கள் சிலரை கொம்பால் தூக்கி வீசின.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்படும் காளையின் திமிலை ஒரு வீரர் 100 மீட்டர் தூரம் வரை பிடித்தபடி செல்ல வேண்டும். அவ்வாறு காளையின் திமிலை பிடித்து அந்த எல்லை வரை சென்ற வீரர்களுக்கும், பிடியில் சிக்காமல் துள்ளிக்குதித்து ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் தங்கக்காசு, வெள்ளிக்காசு, மோட்டார்சைக்கிள்கள், சைக்கிள்கள், கட்டில், பீரோ, பட்டுச்சேலை, அண்டா, பித்தளை, சில்வர் பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், வேட்டி, துண்டு, பனியன்கள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டின்போது மாடு முட்டியதில் வீரர்கள் 9 பேர், பார்வையாளர்கள் 7 பேர், மாடுகளின் உரிமையாளர்கள் 9 பேர் என மொத்தம் 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு திடலில் இருந்து மாடுகள் வெளியேறும் இடத்தில் ஏராளமான பார்வையாளர்கள் நின்று போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வாடிவாசலில் இருந்து, மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடி வந்த ஒரு காளை கொம்பால் முட்டி தூக்கி வீசியதில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (வயது 25) என்பவர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை பாலமேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரம் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதேபோல் 1,188 வீரர்கள் முன்பதிவு செய்து இருந்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் 446 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியில் பங்கேற்கும் வகையில் 700 வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். அவர்களுக்கு பச்சை, நீலம், வெளிர் சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் சீருடைகள் வழங்கப்பட்டு இருந்தன. பிற்பகல் 3.30 மணி வரை மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.

பொதுசுகாதார பணிகள் இணை இயக்குனர் அர்ஜூன்குமார், வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி ஆகியோர் தலைமையில் 10 மருத்துவ குழுக்கள் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளில் ரெட்கிராஸ் அமைப்பினர் உள்பட தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆளில்லா குட்டி விமானம் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி கண்காணிக்கப்பட்டது. 

Next Story