மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில பொங்கலையொட்டி எருது விடும் விழா + "||" + Pongalipotthi bullion festival in the district

மாவட்டத்தில பொங்கலையொட்டி எருது விடும் விழா

மாவட்டத்தில பொங்கலையொட்டி எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கலையொட்டி எருது விடும் விழா நேற்று நடந்தது. இதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சென்னப்பள்ளி கிராமத்தில் பொங்கலையொட்டி எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதற்காக சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து காளைகள் ஓட விடப்பட்டன.


இந்த விழாவை காண சென்னப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்காக இளைஞர்கள் துள்ளி குதித்தபடி ஓடினார்கள். இதில் இளைஞர்கள் பலர் மாடுகளின் தலையில் கட்டப்பட்டிருந்த வண்ண பதாகைகளை பறித்தனர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலமாக காணப்பட்டது. விழாவை முன்னிட்டு சூளகிரி போலீசார் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கிட்டம்பட்டி

கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இதற்காக சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து காளைகள் ஓட விடப்பட்டன. துள்ளி குதித்தபடி ஓடிய காளைகளை விரட்டியபடி இளைஞர்கள் ஓடினார்கள். வண்ண பதாகைகளுடனும், சாமி படங்களை தலையில் மாட்டியபடியும் காளைகள் துள்ளி குதித்தபடி வந்ததை கிட்டம்பட்டி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தாலுகா போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான எருதுகள் ஓட விடப்பட்டன. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.