மாவட்ட செய்திகள்

தஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, மலர்களால் அலங்காரம் 108 பசுக்களுக்கு பூஜை + "||" + 1 tons of khana-kani and flowers for Nandhi Perumal in Tanjore Biggovil puja for 108 cows

தஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, மலர்களால் அலங்காரம் 108 பசுக்களுக்கு பூஜை

தஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, மலர்களால் அலங்காரம் 108 பசுக்களுக்கு பூஜை
மகரசங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, இனிப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது.
தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் சோழர் கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. இந்த நந்திபெருமானுக்கு மகரசங்கராந்தி விழா பொங்கல் பண்டிகையையொட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.


நேற்று மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி பக்தர்கள், வியாபாரிகளால் வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சவ்சவ், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற பல்வேறு வகையான காய்களாலும், ஆரஞ்சுபழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பால்கோவா போன்ற பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மொத்தம் 1 டன் காய்-கனிகள், மலர்கள், இனிப்புகளால் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

108 பசுக்களுக்கு பூஜை

மேலும் மாட்டுப்பொங்கலை யொட்டி 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. நந்திபெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் மாடுகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாட்டுப்பொங்கலையொட்டி தஞ்சை பெரியகோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.