ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத பொங்கல் விழா


ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத பொங்கல் விழா
x
தினத்தந்தி 15 Jan 2018 10:45 PM GMT (Updated: 15 Jan 2018 9:20 PM GMT)

துறையூர் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத பொங்கல் விழா நடைபெற்றது.

துறையூர்,

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம் கோம்பை மற்றும் வண்ணாடு ஆகிய ஊராட்சி பகுதிகளான செம்புளிச்சான்பட்டி, மேலூர், சின்ன இலுப்பூர், பெரிய இலுப்பூர், தேன்பாடி, பாளையம், நாகூர் உள்ளிட்ட 33 கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான சூரிய பொங்கலன்று மலையில் கடுமையான பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் தங்களது மூதாதையர் காலத்திலிருந்து தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், இவ்விழாவில் பெண்கள் பொங்கல் வைக்காமல் ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்கின்றனர். அந்த நேரத்தில் பெண்கள் வீட்டுக்குள் இருந்தனர்.

இவர்கள், பொங்கல் வைப்பதற்காக பச்சைமலையில் மட்டுமே விளையக்கூடிய அபூர்வ நெல் வகைகளான புழுதிகார நெல், மர நெல், தூண்கார நெல் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இவ்வகையான நெல்களுக்கு ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கையான உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகள் தோறும் மா, பாளை உள்ளிட்டவைகளால் தோரணம் கட்டி வாசல் முன்பகுதியில் விறகு அடுப்பு வைத்து பொங்கல் வைத்தனர். பின்பு வீட்டின் வாசற்படி முன்பு கரும்பு வைத்தும், சமைத்த பொங்கலை வைத்தும் சாமி கும்பிடுவதற்காக தும்பைப் பூ, அருகம்புல், ஓணான் பூ ஆகிய பூக்களை வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

பின்னர் புதுமண தம்பதிகளுக்கும், உறவினர்களுக்கும் பச்சைமலையில் விளையக் கூடிய தூண்கார நெல்லை சீர்வரிசையாக கொடுத்தனர். இந்த வழக்கத்தை காலங்காலமாக கடைப்பிடித்து வருவதாக அவர்கள் கூறினர்.

பின்னர் இளைஞர்கள் ஒன்றுகூடி மத்தளம், ஆர்மோனியம் ஆகிய இசை கருவிகளை இசைத்தபடி ஆடிப்பாடியும், வழுக்குமரம் ஏறியும் பொங்கல் விழாவை மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலையில் சூரிய பொங்கல் வைத்து கொண்டாடி வரும் நிலையில் துறையூரை அடுத்த பச்சைமலையில் மட்டும் மாலையில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். 

Next Story