பொங்கல் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது


பொங்கல் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 16 Jan 2018 4:15 AM IST (Updated: 16 Jan 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நேரம் அதிகரிக்கப்பட்டது.

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் அற்புத காட்சியையும் மாலையில் சூரியன் மறையும் ரம்மியமான காட்சியையும் கண்டு மகிழ்வார்கள். மேலும், கடல்நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தற்போது, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று அதிகாலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அவர்கள், கடலில் நீராடி, காந்தி நினைவுமண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், தமிழன்னை பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, கோவளத்தில் உள்ள நீர்விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர். மேலும், விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாபயணிகளின் வசதிக்காக படகு போக்குவரத்து நேரம் 15, 16, 17 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று படகு ஏறி சென்று பார்வையிட்டனர். கடலில் குளிக்கும் போது, ஆழமான பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்தனர்.

இதுபோல், குமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, சொத்தவிளை கடற்கரை போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

தை அமாவாசையையொட்டி முன்னேர்களுக்கு பலிகர்ம பூஜை செலுத்தும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னேர்களுக்கு பலிகர்மம் செலுத்துவார்கள். இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் உதவி சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story