முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட்ட பென்னிகுவிக் பேத்தி, ‘தமிழர்கள் நன்றி மறவாதவர்கள்’ என்று உருக்கம்


முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட்ட பென்னிகுவிக் பேத்தி, ‘தமிழர்கள் நன்றி மறவாதவர்கள்’ என்று உருக்கம்
x
தினத்தந்தி 16 Jan 2018 5:15 AM IST (Updated: 16 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையை பென்னிகுவிக் பேத்தி டயனாஜிப் பார்வையிட்டு, அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘தமிழர்கள் நன்றி மறவாதவர்கள்‘ என்று உருக்கமாக அவர் பேசினார்.

தேனி,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சந்தனபீர்ஒலி. எம்.பி.ஏ. பட்டதாரி. லண்டனில் வசிக்கிற இவர், முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் பென்னிகுவிக்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்து ஆவணப்படம் தயாரித்து வருகிறார்.

அவர், லண்டன் கேம்பர்லி என்ற இடத்தில் சேதம் அடைந்த பென்னிகுவிக்கின் கல்லறையை கண்டறிந்தார். 100 ஆண்டுகளை தாண்டிவிட்டால், கல்லறைகளை இடிப்பது அங்கு வழக்கமாக உள்ளது. ஆனால் பென்னிகுவிக்கின் கல்லறையை இடிக்க கூடாது என்றும், பழுதடைந்த கல்லறையை புனரமைக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

இதுமட்டுமின்றி பென்னிகுவிக்கின் உறவினர்களை தமிழகத்துக்கு அழைத்து வர முடிவு செய்தார்.

அதன்படி பென்னிகுவிக்கின் உடன் பிறந்த சகோதரர் சார்லஸ் என்பவரது மகள் வழி பேத்தி டாக்டர் டயானாஜிப், இங்கிலாந்து தேவாலய அமைச்சர் சரோன்பில்லி, லண்டனில் பென்னி குவிக்கின் கல்லறை உள்ள புனித பீட்டர் தேவாலய செயலாளர் சூசன்பெரோ, ஊடக ஆய்வாளர் ஜெய்னி மோரி ஆகியோரை தமிழகத்துக்கு அழைத்து வந்தார்.

தமிழக, கேரள அரசின் அனுமதியுடன் அவர்கள் முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட்டனர். அணையின் அருகில் உள்ள பென்னிகுவிக்கின் சிலைக்கு டயானாஜிப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அணை கட்டுமான பணிகள் நடைபெற்ற போது, இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்பு தேக்கடியில் இருந்து லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு அவர் வந்தார். அங்குள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதையடுத்து உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் மேள தாளம் முழங்க டயானாஜிப்புக்கு வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பை ஏற்றுக்கொண்ட பென்னிகுவிக் பேத்தி டாக்டர் டயானாஜிப் பேசினார். அப்போது, எங்கள் குடும்பத்தின் மீது தமிழர்கள் வைத்து இருக்கும் அன்பு, பாசம், மரியாதை, கண்டு வியந்து போனேன். தமிழர்கள் வைத்து இருக்கும் மரியாதை பெருமை கொள்ள வைக்கிறது. தமிழர்கள் நன்றி மறக்காதவர்கள் என்பதற்கு இதுவே சான்று. உங்களை பற்றி எங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பேன், என்றார்.

பென்னிகுவிக்கின் 177-வது பிறந்த நாளையொட்டி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சுருளிப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பொங்கல் பானையுடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இங்குள்ள முல்லைப்பெரியாற்று பாலத்தில் வைக்கப்பட்டு இருந்த பென்னிகுவிக் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் பென்னிகுவிக்கின் பேத்தி டாக்டர் டயானாஜிப் பங்கேற்றார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பென்னிகுவிக் பிறந்தநாளை குறிக்கும் வகையில், ஒரே நேரத்தில் 177 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். 

Next Story