நெல்லிக்குப்பம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை


நெல்லிக்குப்பம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 16 Jan 2018 3:15 AM IST (Updated: 16 Jan 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே கோண்டூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). தனியார் கம்பெனியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். பொங்கல் விடுமுறையையொட்டி இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் சுகுமாரின் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து 10 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து சுகுமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து சுகுமார் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிந்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story