மாவட்ட செய்திகள்

கோபியில் ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்; 3 பேர் கைது + "||" + Rajinikanth - Vijay fans clash

கோபியில் ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்; 3 பேர் கைது

கோபியில் ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்; 3 பேர் கைது
கோபியில் பேனர் கிழிக்கப்பட்டதால் ரஜினி–விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. கோவில் விழாவையொட்டி கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் பக்தர்கள் சார்பில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன.


அதேபோல் பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவில் அந்த பகுதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் விளம்பர பலகை (பிளக்ஸ் பேனர்) வைக்கப்பட்டு இருந்தது. அதே பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரத்தினவேல் (வயது 30), சதீஷ் (25), தியாகு (25) ஆகிய 3 பேரும் விளம்பர பலகை வைக்க எதிர்ப்பு தெரிவித்து ரஜினி ரசிகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த நடிகர் விஜய் ரசிகர்கள் தங்களிடம் இருந்த பிளேடை எடுத்து பேனரை சேதப்படுத்தினார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விஜய் ரசிகர்கள் பிளேடால் கீறியதில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஜெகதீசன் (44), பழனிசாமி (46) ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும், விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோபிசெட்டிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரத்தினவேல், சதீஷ், தியாகு ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

கோபியில் பேனர் கிழிக்கப்பட்டதால் ரஜினி–விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.