கழுகுமலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி


கழுகுமலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jan 2018 5:13 AM IST (Updated: 16 Jan 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே பொங்கல் பண்டிகையன்று கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கழுகுமலை,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குமரெட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் ராசுபாண்டி மகன் மாரிமுத்து என்ற மகேஷ் (வயது 27). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது சொந்த ஊருக்கு வந்த அவர், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அதே ஊரைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற கருப்பசாமி (38), கூலி தொழிலாளி. கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (46), சமையல் தொழிலாளி. இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையன்று இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கழுகுமலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மதியம் கழுகுமலையில் இருந்து தங்களது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

கழுகுமலை அருகே காலாங்கரைப்பட்டிக்கும், சங்கரலிங்கபுரத்துக்கும் இடையில் உள்ள ‘எஸ்‘ வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மகேஷ், கருப்பசாமி, ராமசாமி ஆகிய 3 பேரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோதிய வேகத்தில் காரும், மோட்டார் சைக்கிளும் சாலையோர ஓடைக்குள் பாய்ந்தது. மேலும் மோட்டார் சைக்கிள் தரையில் உரசியபடி சிறிது தூரம் சென்றது. இதனால் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. காரின் முன்பக்க டயர் தனியாக கழன்று ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கழுகுமலை போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி (கழுகுமலை), ஆவுடையப்பன் (கயத்தாறு), சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கழுகுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து, மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர்.

விபத்தில் இறந்த மகேஷ், கருப்பசாமி, ராமசாமி ஆகிய 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரபாகரை (23) கைது செய்தனர்.

கழுகுமலை நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் (63). இவர் ஜெயங்கொண்டத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தன்னுடைய மனைவியுடன் சொந்த ஊருக்கு காரில் வந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்தில் இறந்த மகேஷின் மனைவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். ராமசாமிக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். கருப்பசாமிக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

பொங்கல் பண்டிகை தினத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story