பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவுகிறது


பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவுகிறது
x
தினத்தந்தி 17 Jan 2018 3:00 AM IST (Updated: 17 Jan 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவி வருகிறது.

பெங்களூரு,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர் ‘இடமாற்றத்திற்கு பயப்படாமல் பணியாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அம்பலப்படுத்தினார்


கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் ரூபா. ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்த சொகுசு வசதிகளை அம்பலப்படுத்தினார். இதன் மூலம் அவர் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார். இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் ஊர்க்காவல் படையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பேச்சு சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அவர் பேசி இருப்பதாவது:-

பணியிட மாற்றத்தை பற்றி கவலைப்படாமல் இருந்தால் தான் அரசியல் சாசனப்படி அதிகாரிகள் பணியாற்ற முடியும். நான் ஆயுதப்படையில் பணியாற்றியபோது, காவலர்கள் பற்றி விசாரித்தேன். அதில் பெரும்பாலானவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மெய்காவலர்களாக பணியாற்றுவது தெரியவந்தது. இது சட்டவிரோதமானது. அவர்களை வாபஸ் பெற முடிவு செய்தேன். இதற்கு எனது மேல் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தார். ஆயினும் நான் பயப்படாமல் அவ்வளவு பேரையும் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பும்படி உத்தரவிட்டேன்.

தலை வணங்காமல்...

கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக பணியாற்றிய ஒருவர் அந்த பதவியை இழந்தார். ஆயினும் அவரிடம் இருந்த அரசின் கார்களை அவர் திரும்ப ஒப்படைக்கவில்லை. இது எனது கவனத்திற்கு வந்தது. அந்த வாகனங்களை திரும்ப பெற்றேன். அப்போதும் எனது நடவடிக்கைக்கு எதிர்ப்பு இருந்தது. சவாலை எதிர்கொண்டேன்.

எனக்கு முன்பு எனது இடத்தில் இருந்த அதிகாரிகள் இதுபற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை? என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிகாரிக்கு அரசியல் சாசனம் பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் யாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல் பணியாற்ற வேண்டும். அதிகாரிகள் பணியிட மாற்றத்திற்கு பயப்படாமல் பணியாற்ற வேண்டும். அப்போது தான் யாருக்கும் தலை வணங்காமல் பணியாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

தைரியமான பெண் அதிகாரி

போலீஸ் துறையில் தைரியமான பெண் அதிகாரி என்ற பெயரெடுத்துள்ள ரூபாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான ‘லைக்‘குகள், பகிர்வுகள் கிடைத்துள்ளன.

Next Story