தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் புனித நீராடிய பொதுமக்கள்


தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் புனித நீராடிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jan 2018 4:30 AM IST (Updated: 17 Jan 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

விக்கிரமசிங்கபுரம்,

தை அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் பாபநாசத்துக்கு வர தொடங்கினர். இவர்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். அதன்பிறகு பாபநாசம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

தர்ப்பணம் கொடுப்பவர்களால் பாபநாசத்தில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்களின் வசதிக்காக பாபநாசம் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாலையில் பாபநாசம் கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறை நாட்களில் தை அமாவாசை வந்ததால், அகஸ்தியர் அருவி, காரையாறில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பாபநாசம் யானை பாலத்தில் இருந்து தலையணை செல்லும் வரை எங்கும் பக்தர்களின் தலையாகவே காட்சி அளித்து. கோவிலுக்கு வந்து இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் கார், இருசக்கர வாகனங்களில் வந்து இருந்தனர். இதனால் பாபநாசம் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தை மாதம் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நெல்லை தாமிரபரணி ஆற்றில் நடந்தது. நெல்லையில் குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, குட்டத்துறை இசக்கியம்மன் கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை உள்ளிட்ட பகுதியில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கலந்து கொண்டவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் ஆற்றங்கரையில் அமர்ந்து வேத மந்திரங்களை சொல்லி மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு, தண்ணீர் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று குற்றாலம், அம்பை உள்ளிட்ட இடங்களிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Next Story