எருதுகட்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


எருதுகட்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 17 Jan 2018 4:30 AM IST (Updated: 17 Jan 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே எருதுகட்டும் நிகழ்ச்சியின்போது வாலிபர் ஒருவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று எருது கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் திரண்டு பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரகு என்கிற ராஜசேகர் (வயது 28) அந்த வழியாக வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தோக்கவாடியில் உள்ள பெங்களூரு - புதுச்சேரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் கர்ணன், சப் - இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், தமிழ்மணி, தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார், போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story