35 சதவீத ஊதிய உயர்வு கர்நாடக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை


35 சதவீத ஊதிய உயர்வு கர்நாடக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை
x
தினத்தந்தி 17 Jan 2018 3:30 AM IST (Updated: 17 Jan 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கவும், 35 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கவும், 35 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிட முதல்-மந்திரி சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.

இடைக்கால நிவாரணம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கிவிட்டது. 2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி 16-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தேர்தல் பட்ஜெட் என்பதால், இதில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தில் சுமார் 6½ லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சீனிவாசமூர்த்தி தலைமையில் ஊதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டு சுமார் 5 மாதங்கள் ஆகிவிட்டன. அந்த குழு விரைவில் கர்நாடக அரசிடம் அறிக்கையை வழங்க இருக்கிறது. ஊதிய குழு பரிந்துரைகள் அமல்படுத்தும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கேரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது.

35 சதவீதம் ஊதிய உயர்வு

பொதுவாக முதல்-மந்திரி சித்தராமையா அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் என்ற ஒரு கருத்து ஊழியர்கள் மத்தியில் நிலவுவது உண்டு. தேர்தல் நெருங்குவதால் இந்த எண்ணத்தை போக்க சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்காக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

அதாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்தி அரசு ஊழியர்களுக்கு 35 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்குவது, ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவது, அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்குவது என்பது போன்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அறிவிப்பு எப்போது?

இந்த புதிய திட்டங்கள் பற்றி முதல்-மந்திரி சித்தராமையா வருகிற பட்ஜெட்டிலோ அல்லது அதற்கு முன்பாகவோ அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடைசியாக சதானந்தகவுடா முதல்-மந்திரியாக இருந்தபோது ஊதிய குழு அமல்படுத்தப்பட்டு அரசு ஊழியர்களுக்கு 22 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story