உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 571 காளைகள் சீறிப்பாய்ந்தன, 40 இளைஞர்கள் காயம்


உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 571 காளைகள் சீறிப்பாய்ந்தன,  40 இளைஞர்கள் காயம்
x
தினத்தந்தி 17 Jan 2018 5:30 AM IST (Updated: 17 Jan 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டில் 571 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவை முட்டித்தள்ளியதில் 40 வீரர்கள் காயம் அடைந்தனர்.

மதுரை,

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஜல்லிக்கட்டு கிராமப்புறங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக் கட்டு மீதான தடையை நீக்க மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு பின்னர் அதன் மீதான ஆர்வம் அனைவரிடத்திலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, பெருமை பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. இந்த ஜல்லிக்கட்டை காண நேற்றுமுன்தினம் முதலே, பொதுமக்கள் கூட்டம் அலங்காநல்லூரை நோக்கி திரண்டு வந்தது. நேற்று அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலை மோதியது. அலங்காநல்லூர் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு திருவிழா, கோட்டை முனியாண்டி சாமி திடலில் நடந்தது.

ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்தைச் சுற்றிலும் திரண்டு இருந்தனர். அவர்கள் வசதியாக உட்கார்ந்து ஜல்லிக்கட்டை ரசிப்பதற்காக மரக்கட்டைகளால் ஆன காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, அங்குள்ள திடலின் இருபுறமும் சுமார் 150 மீட்டர் தூரத்துக்கு கம்பி வலைகள் கட்டப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டு காளைகள், அவற்றை அடக்கும் வீரர்கள் கீழே விழுந்தால் காயம் அடையாதபடி இருக்க முன்னேற்பாடாக தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. திடலுக்கு உள்ளேயும், வெளியேயும் காலரிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரடி மேற்பார்வையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க அலங்காநல்லூர், பாலமேடு, மேலூர், ஒத்தக்கடை, சத்திரப்பட்டி, அவனியாபுரம், வரிச்சியூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்தும், தஞ்சை, திருச்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், கரூர், பெரம் பலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான காளைகள் வந்தன. அவற்றை, கால்நடை டாக்டர்கள் தீவிரமாக பரிசோதனை நடத்தினார்கள். அதிகாலை முதலே பரிசோதனை நடத்தப்பட்டு தகுதி உள்ள காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.

மாடு பிடிக்கும் வீரர்களின் பெயர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தன. பதிவு செய்தவர்களின் பட்டியலின்படி அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் உடல் பரிசோதனை செய்தனர். மொத்தம் 1,050 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால் நேற்று 890 பேர் தான் வந்திருந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் பல்வேறு காரணங்களுக்காக 193 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 697 வீரர்கள் தலா ஒரு ரவுண்டுக்கு 50 பேர் வீதம் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். அவர்களுக்கு பச்சை, மஞ்சள், நீலம், வெளிர் சிவப்பு ஆகிய நிறங்களில் பனியன், டவுசர்கள் சீருடைகளாக வழங்கப்பட்டிருந்தன. சீருடை அணிந்தவர்கள் மட்டுமே மாடு பிடிக்க களத்தில் அனுமதிக்கப்பட்டார்கள்.

விழாத் திடலுக்கு காலை 7.30 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பின்பு 8 மணிக்கு இருவரும் பச்சைக் கொடி காட்டி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

முதன்முதலாக அலங்காநல்லூர் முனியாண்டி சாமி கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் முரட்டுக்காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் வீரர்களிடமிருந்து நழுவி ஓடிவிட்டன. பல காளைகளை இளைஞர்கள் லாவகமாக பிடித்து அடக்கினர். பல காளைகள் ஆக்ரோஷமாக துள்ளிக்குதித்து பிடிபடாமல் ஓடின. சீறி வந்த சில காளைகளின் திமிறிய திமிலை விடாப்பிடியாக பிடித்து ஓடி இளைஞர்கள் பரிசுகளை தட்டிச்சென்றனர்.

வாடிவாசலை விட்டு விருட்டென வந்த ஒரு காளை நான்கு கால் பாய்ச்சலில் இளைஞர்கள் கூட்டத்தை கடந்து சென்றது. வாடிவாசல் அருகே சுற்றி சுற்றி வந்து வீரர்களை விரட்டிய காளையும் உண்டு.

மாடு பிடிபட்டால் அதை பிடித்த வீரருக்கும், யாரிடமும் சிக்காமல் துள்ளிக்குதித்து ஓடிவிட்டால் அந்த காளையின் உரிமையாளருக்கும் அறிவித்த பரிசுகள் வழங்கப்பட்டன.

தங்கக்காசு, வெள்ளிக்காசு, செல்போன், கட்டில், பீரோ, விமான டிக்கெட், மின்விசிறி, மிக்சி, சைக்கிள், பித்தளை, எவர்சில்வர் அண்டா, சுவர்கடிகாரம், குத்துவிளக்கு, அயர்ன்பாக்ஸ், வேட்டி, துண்டு, சட்டை ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. அவ்வப்போது ரொக்கப்பரிசுத்தொகையும் வழங்கினார்கள்.

ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி அளவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் ஒரு மணி நேரம் அதாவது மாலை 4 மணி வரை விழா நடத்தலாம் என்று மதுரை மாவட்ட கலெக்டருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கினார். மாலை 4 மணி அளவில் விழாவை முடித்துக்கொள்ளலாம் என்று கலெக்டர் அறிவித்தபோது இன்னும் நிறைய காளைகள் அவிழ்த்துவிடாமல் உள்ளன. எனவே மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று அனைவர் சார்பாக கேட்டுக்கொண்டதை கலெக்டர் ஏற்றார்.

இதனால் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. மொத்தம் பதிவு செய்திருந்த காளைகளில் 630 காளைகள் தான் நேற்று ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்தன. அவற்றில் 27 காளைகளை கால்நடை டாக்டர்கள் தகுதிநீக்கம் செய்தனர். மீதமுள்ள 603-ல் 571 காளைகள் தான் அவிழ்த்துவிடப்பட்டன.

ஜல்லிக்கட்டில் மாடு முட்டித் தள்ளியதில் 40 இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 7 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்காக ஆம்புலன்சுகளும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

ஜல்லிக்கட்டு காளைகள் காயம் அடைந்தால் சிகிச்சை அளிக்க கால்நடை டாக்டர்கள் குழுவினர் தயார்நிலையில் இருந்தனர். மாடுபிடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் மைதானம் அருகிலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தயார் நிலையில் இருந்தனர். காயம் அடைந்து வந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த விழாக்குழுவினர் ஒவ்வொரு காளைக்கும் கூடுதல் பரிசுகளை வாரி வழங்கினார்கள். இதனால் உற்சாகம் அடைந்த வீரர்கள் ஒவ்வொரு மாட்டையும் அடக்குவதில் தனி கவனம் செலுத்தினர்.

விழா நிறைவில் சிறந்த வீரராக அலங்காநல்லூரை அடுத்த பெரிய ஊர்சேரியை சேர்ந்த அஜய் (24) என்பவரும், சிறந்த காளை உரிமையாளராக சிக்கந்தர்சாவடியை அடுத்த மிளகரணை சந்தோஷும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் மாடு, புதுக்கோட்டை தொண்டமான் மாடு, எட்டிமங்கலத்தை சேர்ந்த அமுதா மாடு உள்பட 9 மாடுகள் சிறந்தவையாகவும், மதுரை வீரபாண்டியை சேர்ந்த போலீஸ்காரர் வினோத் உள்பட 5 பேர் சிறந்த வீரர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டன.

இதில் வீரர் அஜய், கடைசி ரவுண்டில் இறங்கி 8 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார். அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினார்கள்.

ஜல்லிக்கட்டை காண இங்கிலாந்து, மலேசியா, பிரான்சு, இத்தாலி, பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து இருந்தனர். அவர்கள் தனிமேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். வெளிநாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஜல்லிக்கட்டு காளைகளை வீரர்கள் அடக்கியபோது மகிழ்ச்சியுடன் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

கூட்டத்தினரையும், சீறிப்பாய்ந்த காளைகளையும், வீரர்கள் அடக்கிய மெய்சிலிர்த்த காட்சிகளையும் தங்கள் வீடியோ கேமரா மூலம் படம் பிடித்தார்கள். வெளிநாட்டினரில் ஒரு சில பத்திரிகையாளர்களும் வந்து இருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை மடிக்கணினி மூலம் இணைய தளத்தின் வழியாக தங்கள் செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியபடி இருந்தனர். 

Next Story