3 ஆண்டுகளுக்கு பிறகு சிராவயலில் மஞ்சுவிரட்டு; 1,200 காளைகள் சீறிப்பாய்ந்தன


3 ஆண்டுகளுக்கு பிறகு சிராவயலில் மஞ்சுவிரட்டு; 1,200 காளைகள் சீறிப்பாய்ந்தன
x
தினத்தந்தி 17 Jan 2018 4:00 AM IST (Updated: 17 Jan 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சுவிரட்டுக்கு புகழ்பெற்ற சிராவயலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 1,200 காளைகள் சீறிப்பாய்ந்தன.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ளது சிராவயல். மஞ்சுவிரட்டுக்கு உலக புகழ்பெற்ற ஊர். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இணையானது சிராவயல் மஞ்சு விரட்டு. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தை மாதம் 3-ம் நாள் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.

தமிழர்களின் வீரவிளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த கடந்த 2014-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் சிராவயலில் கடந்த 3 ஆண்டுகளாக மஞ்சு விரட்டு நடத்தப்படவில்லை.

தற்போது தடையை நீக்க கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இந்த ஆண்டு சிராவயலில் மஞ்சுவிரட்டு நடத்த கிராம கமிட்டியினர் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் இளைஞர்கள் மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயாராகினர். இதே வேளையில் காளைகளும் தயார்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் நேற்று புகழ்பெற்ற சிராவயலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து முன்னோர் வழிபாடு செய்து நாட்டார்களை அழைத்து கொண்டு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு கிராமத்தினர் ஊர்வலமாக வந்தனர். அதன்பின்பு மாட்டு தொழுவினை மும்முறை வலம் வந்தனர். பின்னர் தொழுவில் கட்டப்பட்டிருந்த அனைத்து காளைகளுக்கும் வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு கலெக்டர் லதா கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார்.

இதில் சப்-கலெக்டர் ஆஷா அஜீத், வருவாய் அலுவலர் இளங்கோ, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. பெரியகருப்பன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு, மஞ்சுவிரட்டை பார்த்தனர்.

முதலாவதாக கோவில் காளைகள் தொழுவம் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. தொழுவிலிருந்து 70-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மேலும் திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 1,200 காளைகள் சிராவயல் கிராமத்தில் உள்ள கும்மங்குடிபொட்டல், அதிகரம், பரணிகண்மாய், தென்கரை கண்மாய் ஆகிய பகுதிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.

அப்போது சீறிப்பாய்ந்த காளைகளுடன், ஏராளமான மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இந்த மஞ்சுவிரட்டு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

சிராவயல் மஞ்சுவிரட்டை காண தென்மாவட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். மேலும் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், சிராவயல், தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் திருவிழா கோலம் பூண்டிருந்தது.

மஞ்சுவிரட்டில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மஞ்சுவிரட்டு திடலில் திருப்பத்தூர், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும், நர்சுகளும் முதலுதவி சிகிச்சைக்காக சிறப்பு முகாம் அமைத்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 

Next Story