முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக் புகழ், உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும் - ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்


முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக் புகழ், உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும் - ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்
x
தினத்தந்தி 17 Jan 2018 5:15 AM IST (Updated: 17 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

‘முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான்பென்னி குவிக்கின் புகழ், உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்‘ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள க.புதுப்பட்டி ஆர்.ஆர்.இண்டர்நேஷனல் பள்ளியில் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான்பென்னிகுவிக்கின் உடன் பிறந்த சகோதரர் சார்லஸ்சின் மகள் வழி பேத்தி டாக்டர் டயானாஜிப்க்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் முன்னிலை வகித்தார். விழாவில், டாக்டர் டயானாஜிப் மற்றும் அவருடன் வந்த இங்கிலாந்து தேவாலய அமைச்சர் சாரோன்பில்லி, புனித பீட்டர் தேவாலய செயலாளர் சூசன்பெரோ, ஊடக ஆய்வாளர் ஜெய்னி மோரி ஆகியோரை வரவேற்று துணை முதல்-அமைச்சர் நினைவு பரிசுகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

பென்னிகுவிக், ராணுவத்தில் பொறியாளராக இருந்து தென் மாவட்டத்தில் உள்ள தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.

இந்த அணையை கட்டும் போது பெரும் வெள்ளம் ஏற்பட்டு அணை முழுவதும் அடித்து செல்லப்பட்டது. இருப்பினும் மனம் தளராமல் அவருடைய மனைவி பெயரில் இருந்த சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை விற்று அணையை கட்டி முடித்தார். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் கேரள அரசு முட்டுக்கட்டைபோட்டு வந்தது.

பூகம்பமே ஏற்பட்டாலும் அணை உடையாது. அணை பலமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம். அதன் பிறகுதான் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டபோராட்டம் நடத்தி வெற்றிபெற்றார்.

பென்னிகுவிக்கை போற்றும் வகையில், லோயர்கேம்ப்பில் மணிமண்டபத்துடன் அவருடைய முழு உருவச்சிலை, தேனி பஸ் நிலையத்திற்கு பென்னிகுவிக் பெயர் சூட்டி ஜெயலலிதா மகிழ்ந்தார். தமிழர்களின் ஆன்மாவில் பென்னிகுவிக் கலந்து விட்டார் என்றே கூறலாம்.

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் அவர் பிறந்துள்ளார். இந்த உலகம் உள்ளவரை பென்னிகுவிக்கின் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story