தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன் - டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன் - டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 17 Jan 2018 4:45 AM IST (Updated: 17 Jan 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என்று குன்னூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஊட்டி,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த எம்.ஜி.ஆர். சிலை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டனில் உள்ளது. இன்று (புதன்கிழமை) எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு அந்த சிலைக்கு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இதற்காக விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பொம்மையார்பாளையம் கிராமத்தில் இருந்து கார் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு புறப்பட்டார். அவர் அவினாசி, அன்னூர், மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக ஊட்டிக்கு நேற்று இரவு 8.45 மணிக்கு வந்தார். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி அவரை வரவேற்றனர்.

டி.டி.வி.தினகரன் காரில் இருந்தபடியே ஆதரவாளர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார். பெண்கள் அளித்த பூரண கும்ப மரியாதையை டி.டி.வி.தினகரன் வாகனத்தில் நின்றபடியே பெற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு ஆதரவாளர்கள் பூங்கொத்து, புத்தகங்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து படுகர் இன மக்களின் பாரம்பரிய தலைப்பாகை, சீலை என்ற போர்வையை டி.டி.வி.தினகரனுக்கு அணிவித்து ஆதரவாளர்கள் மேடைக்கு அழைத்து வந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஆதரவாளர்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

நீலகிரி மாவட்டம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிடித்த மாவட்டம் ஆகும். ஜெய லலிதாவால் கோத்தகிரியில் நிறுவப்பட்டு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நாளை (இன்று) மாலை அணிவித்து மரியாதை செலுத்து உள்ளேன். 2 மாதத்தில் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளோம். அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து பெற்ற கட்சி, இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.

எங்களிடம் தான் தொண்டர்கள் அதிகமாக உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் என்னை அப்பகுதி மக்கள் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். வருகிற உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் தொண்டர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். பல கட்சிகளில் இருந்து விலகி இன்று எனது அணியில் சேரும் அனைவரையும் நான் வாழ்த்தி வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனிடையே அவர் கோத்தகிரியில் இன்று தனிக்கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் பரவியது. இது குறித்து நேற்று இரவு குன்னூரில் அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனிக்கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை நாளை (அதாவது இன்று) வெளியிட மாட்டேன். அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர் ஒரு வாரத்தில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன். தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை விரைவில் அகற்றி விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story