அவினாசியில் சாலை தடுப்பில் அரசு பஸ் மோதி கவிழ்ந்தது; 18 பயணிகள் படுகாயம்


அவினாசியில் சாலை தடுப்பில் அரசு பஸ் மோதி கவிழ்ந்தது; 18 பயணிகள் படுகாயம்
x
தினத்தந்தி 16 Jan 2018 10:07 PM GMT (Updated: 2018-01-17T03:36:58+05:30)

அவினாசியில் சாலை தடுப்பில் அரசு பஸ் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

அவினாசி,

சேலத்தில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் நேற்று காலை 6.30 மணி அளவில் அவினாசி ராஜன் நகர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்து இரண்டு சக்கரங்களும் தனித்தனியாக கழன்று துண்டானது. மேலும் பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து காயம் அடைந்து “அய்யோ, அம்மா, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினார்கள்.

இந்த விபத்தில் ஈரோட்டை சேர்ந்த யசோதா (வயது 28), கோவையை சேர்ந்த காயத்ரி(26), ஊத்துக்குளி பூங்கொடி (42), சேலம் சண்முகம் (48), நாமக்கல் பொங்கியண்ணன் (62), கோவை சரவணக்குமார் (26), சென்னை பரமசிவம் (62), திருப்பூர் ரேகா (23), பிரபு (30), நாமக்கல் வேல்முருகன் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அருகில் உள்ள பொதுமக்கள் ஓடிச்சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ரேகா, பிரபு ஆகியோர் மட்டும் மேல்சிகிச்சைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் பஸ்சை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடிவருகிறார்கள்.

இந்த விபத்தால் அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்டு அப்புறப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. 

Next Story