தொடர் விடுமுறை முடிவடைந்தது; விழுப்புரம் பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது


தொடர் விடுமுறை முடிவடைந்தது; விழுப்புரம் பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது
x
தினத்தந்தி 17 Jan 2018 3:41 AM IST (Updated: 17 Jan 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று விழுப்புரம் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

விழுப்புரம்,

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூரில் தங்கியிருந்து பணியாற்றி வருபவர்களும், படித்து வருபவர்களும் அவரவர் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியவை முடிவடைந்தது. இதையடு:த்து தொடர் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மீண்டும் தாங்கள் பணியாற்றி வரும் இடம் மற்றும் படிக்கும் இடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக அவர்கள் பஸ்சில் முண்டியடித்து கொண்டு ஏறியதை காணமுடிந்தது. இது தவிர தென் மாவட்டங்களுக்கு சென்றவர்களும் தங்களது சொந்த ஊரில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கார்களிலும் சென்றனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஒரே நேரத்தில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

உடனே சுங்கச்சாவடி அதிகாரிகள் விரைந்து சென்று வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்து உடனுக்குடன் செல்ல வழிவகை செய்தனர். அதாவது திருச்சி- சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியின் 6 வழிப்பாதைகளில் அனுப்பப்படும். ஆனால் நேற்று விழுப்புரம்- சென்னை மார்க்கம் செல்லும் வாகனங்களின் 3 வழிப்பாதைகளையும் கூடுதலாக திறக்கப்பட்டு 9 வழிப்பாதைகளில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் பல மணி நேரம் இந்த போக்குவரத்து நெரிசல் நீடித்து அதன் பிறகே சரியானது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதேபோல் விழுப்புரம் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தென் மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

Next Story