தொற்றுநோய் பரவும் அபாயம்: செல்ல பிராணிகளை கடற்கரை சாலையில் அழைத்து செல்ல தடை


தொற்றுநோய் பரவும் அபாயம்: செல்ல பிராணிகளை கடற்கரை சாலையில் அழைத்து செல்ல தடை
x
தினத்தந்தி 17 Jan 2018 4:30 AM IST (Updated: 17 Jan 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவை கடற்கரை சாலையில் செல்லபிராணிகளை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுஎன்று புதுவை நகராட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை நகராட்சி ஆணையர் கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை நகர பகுதியான புல்வார்டு, கடற்கரை சாலை, கவர்னர் மாளிகை, சட்டசபை, கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்கள், தலைமை செயலகம், அருங்காட்சியகம், பாரதி பூங்கா மற்றும் அங்காடிகள் ஆகியவை முக்கிய சுற்றுலா பகுதியாகவும், அதிக நேரம் மக்கள் நடமாட்டம் உள்ளதாகவும், வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதியாகவும் விளங்குகிறது.

புதுவை நகரப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் உணவு பொருட்களை தெருவில் வீசுவதால் அதை உண்ணுவதற்காக தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள் வருகின்றன.

இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும், போக்குவரத்து இடையூறும், அதனால் விபத்தும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க நகராட்சி சட்ட விதி 1973 பகுதி 338 மற்றும் 339-ன்படி மேற்கண்ட பகுதிகளில் திண்பண்டங்களை வீதியில் போடுவது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.

புதுவையின் அழகிய கடற்கரை நமது சுற்றுலா தலங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டு முழுவதும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் தனியார் மற்றும் அரசு துறைகளினாலும் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இவை தவிர இங்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் உடல்நலம் பேண நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். புதுவை கடற்கரை சாலையில் சிறுவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அரசு சார்பற்ற நிறுவனங்களால் பல்வேறு ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அவ்வப்போது அமைதியாக நடத்தப்படுகின்றன.

குடியிருப்போர் அதிகம் இல்லாத இடமாக கடற்கரை சாலை திகழ்கிறது. ஆனாலும் புதுச்சேரி நகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்தும், கடற்கரை சாலையில் நடை பயிற்சி மேற்கொள்வோரிடமிருந்தும் தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் ஏற்படும் தொல்லைகள் தொடர்பான புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆகையால் கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் 9 மணிவரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பொதுமக்கள் தங்கள் நாய்களை அழைத்து செல்ல தடை செய்யப்படுகிறது. புதுவை நகராட்சியில் உரிமம் பெற்ற செல்ல பிராணிகள் மட்டும் மற்ற நேரங்களில் கடற்கரை சாலையில் அனுமதிக்கப்படும்.

புதுவை நகராட்சி சட்டம் 1973-ன்படி புதுவை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் தமது செல்ல பிராணிகளுக்கு (நாய் மற்றும் பூனை) புதுச்சேரி நகராட்சியில் வளர்ப்பு உரிமம் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். மேலும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் வசிப்போரும் தமது செல்ல பிராணிகளுக்கு புதுச்சேரி நகராட்சி கால்நடை மருத்துவ பிரிவில் வளர்ப்பு உரிமம் பெற்றுக்கொள்ளலாம். உரிமம் பெறாத செல்ல பிராணிகள் நகராட்சியினால் பறிமுதல் செய்யப்படும்.

புதுவை நகராட்சி பகுதியில் கால்நடைகளை திரியவிட்டால் புதுச்சேரி நகராட்சியினால் கால்நடைகளை பிடித்து அரசு அங்கீகாரம் பெற்ற புதுச்சேரி அல்லது தமிழ்நாட்டு பகுதியில் உள்ள கோசாலையில் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும். அப்படி ஒப்படைக்கப்படும் கால்நடைகள் எத்தகைய சூழ்நிலையிலும் உரிமையாளர்களுக்கு திருப்பித்தரப்பட மாட்டாது. மேலும் தெருநாய்களுக்கு பழைய சாராய ஆலை அருகிலும், சுப்பையா சாலை தீயணைப்பு நிலையம் அருகிலும், செஞ்சி சாலை நகராட்சி அங்காடி அருகிலும், கப்பித்தேன் மரி சேவியர் வீதி செவிலியர் விடுதி பின்புறமும், பஜார் செயிண்ட் லோரான் வீதி வளைவு செஞ்சிசாலையிலும் உணவு அளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆணையர் கணேசன் கூறியுள்ளார். 

Next Story