வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பாம்பூருணி பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பாம்பூருணி பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 Jan 2018 10:30 PM GMT (Updated: 2018-01-18T00:32:22+05:30)

ராமநாதபுரம் அருகே உள்ள பாம்பூருணி பகுதி பொதுமக்கள் 40 வருடங்களாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பாம்பூருணி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 பாம்பூருணி பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சுமார் 90 குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்று ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்தும் பெற்று பயன்படுத்தி வருகிறோம். வீடுகளுக்கு முறையான வரி செலுத்தி வரும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரி வந்தோம். இதனை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு பாம்பூருணி பகுதியை சேர்ந்தவர்கள் பட்டா வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இதன்பின்னர் இந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்ட நிலையில் திடீரென்று கடந்த சில மாதங்களுக்குமுன் ராமநாதபுரம் நகரசபை சார்பில் கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள நிலத்தினை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீசு வழங்கினர். பாம்பூருணி பகுதி என்பது ஓடை மற்றும் நீர்வரத்து கால்வாய் உள்ள பகுதி கிடையாது.

கடந்த பல வருடங்களாக எங்களின் பயன்பாட்டிற்காக தோண்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த குளம். இப்பகுதியினர் யாரும் குளத்தினை ஆக்கிரமித்து வீடு கட்டவில்லை. எங்களின் குடியிருப்பிற்காக தோண்டப்பட்ட குளம்தான் பாம்பூருணி, கடந்த 40 வருடங்களாக இதே நிலையில்தான் இந்த பகுதி இருந்து வருகிறது. தற்போது எங்களை காலி செய்ய வேண்டும் என்றும் அதற்கு மாற்றாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்று குடியேறுமாறும் கூறிவருகின்றனர்.

அந்தப்பகுதி எந்தவித வசதியும் இல்லாத முற்றிலும் ஊருக்கு வெளியில் உள்ள பகுதி. எங்கள் பகுதியில் உள்ளவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருவதால் அங்கு சென்று எங்களால் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. எனவே, எங்களுக்கு பாம்பூருணி பகுதியிலேயே பட்டா வழங்கி வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கோர்ட்டு உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாகவும், இருப்பினும் இதுகுறித்து அதிகாரிகளை வைத்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

Next Story