கயத்தாறு அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்ததில் 6 பேர் பலி; மேலும் 7 பேர் காயம்


கயத்தாறு அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்ததில் 6 பேர் பலி; மேலும் 7 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2018 3:00 AM IST (Updated: 18 Jan 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி ஓடைக்குள் வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி ஓடைக்குள் வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு இந்த துயர சம்பவம் நடந்தது.

பாலத்தில் மோதி ஓடைக்குள் கவிழ்ந்தது

மத்தியபிரதேச மாநிலம் மூர்சந்த் பகுதியைச் சேர்ந்த 12 பேர், தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக ரெயிலில் புறப்பட்டு சென்னை வந்தனர். பின்னர் அவர்கள், சென்னையில் இருந்து வாடகைக்கு வேனை அமர்த்திக்கொண்டு அந்த வேனில் புறப்பட்டு மாமல்லபுரம், ராமேசுவரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு அதே வேனில் புறப்பட்டு வந்தனர். மதுரையைச் சேர்ந்த முத்து காமாட்சி(வயது 46) அந்த வேனை ஓட்டினார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையில் குறுகலான ஓடைப்பாலத்தில் வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓடை பாலத்தின் தடுப்பு சுவரில் வேன் மோதியது. பாலத்தின் தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் சுமார் 15 அடி ஆழ ஓடைக்குள் வேன் பாய்ந்து கவிழ்ந்தது.

மீட்பு பணி

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் கூக்குரலிட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், அலறல் சத்தம் கேட்டு பார்த்தபோது ஓடைக்குள் வேன் கவிழ்ந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து சென்று, வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

6 பேர் பலி; மேலும் 7 பேர் காயம்

இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி ரமேஷ்குமார், கனையலால், டீக்காம், லால்சந்த் ஆகிய 4 ஆண்களும், ரேகா, விந்தியா ஆகிய 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ரூட்லி, சந்திரா, புனிதா, சரளா தேவி, சோனம் ஆகிய 5 பெண்களும், மோக்ஸ்(10) என்ற சிறுவனும், டிரைவர் முத்துகாமாட்சியும் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

விபத்தில் இறந்த 6 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடைக்குள் கவிழ்ந்த வேனை காலையில் கிரேன் மூலம் வெளியே எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது பாலத்தின் தடுப்பு சுவரில் வேன் மோதி ஓடைக்குள் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story