ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
x
தினத்தந்தி 18 Jan 2018 3:45 AM IST (Updated: 18 Jan 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

கோவை,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று திரளான ஊழியர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.சாந்தி தலைமை தாங்கினார். பொருளாளர் புனிதவதி, செயலாளர் ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். போராட்டம் குறித்து மாவட்ட தலைவர் சாந்தி, செயலாளர் ஸ்டெல்லா ஆகியோர் கூறியதாவது:–

அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தையும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அலுவலர்களுக்கு இணையான ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

நிலுவை தொகையை வழங்குவதுடன், எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் 7–ந்தேதி, 20–ந்தேதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இப்போது அடையாள வேலைநிறுத்தம் செய்து தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக அடுத்த மாதம் 6, 7, 8–ந் தேதிகளில் சென்னையில் தரமணி அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து அவர்கள் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடமும் மனு அளித்தனர்.

Next Story