ஜெயலலிதா முதல் நாளே இறந்தாரா? திவாகரன் கூறிய கருத்து பற்றி எனக்கு எதுவும் தெரியாது - டி.டி.வி. தினகரன் பேட்டி


ஜெயலலிதா முதல் நாளே இறந்தாரா? திவாகரன் கூறிய கருத்து பற்றி எனக்கு எதுவும் தெரியாது - டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 17 Jan 2018 11:15 PM GMT (Updated: 2018-01-18T00:48:43+05:30)

ஜெயலலிதா முதல் நாளே மாரடைப்பினால் இறந்தாரா? என்பது பற்றி திவாகரன் கூறுவது பற்றி எனக்கு எதுவும்தெரியாது என்று கோவையில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

கோவை,

 கோவை வந்த டி.டிவி. தினகரன் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நிருபர்களிடம் கூறியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4–ந் தேதி மாலையில் மாரடைப்பு வந்தது. மாரடைப்பு வந்ததும் அவர் இறந்து விட்டார் என்று நானோ, நீங்களோ சொல்ல முடியாது. டாக்டர்கள் தான் சொல்ல வேண்டும். மாரடைப்பு வந்ததும் டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. அதன்பின்னர் டாக்டர்கள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று சொன்னார்கள். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வந்தது என்று தகவல் கிடைத்ததும் நான் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு போகும் போது மாலை 6.30 மணி அல்லது 7 மணி இருக்கும். அது தான் எனக்கு தெரியும்.

திவாகரன் சொல்வது பற்றி எனக்கு தெரியாது. அப்போது அவர் எப்போது வந்தார் என்பது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு தெரியாத வி‌ஷயத்தை பற்றி நான் எப்படி கருத்து சொல்ல முடியும். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். திவாகரன் சொல்வது உண்மையா, இல்லையா என்று நான் சொல்ல முடியாது. அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா பெரிய தலைவர். அவர் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போதே இறந்து விட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அது தவறு என்று வெற்றிவேல் வெளியிட்ட கேசட்டின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம், கதை கட்டலாம் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். திவாகரன் இப்போது ஏதோ சொன்னார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.ஜெயலலிதா இறந்த பின்னர் மத்திய அரசு தனக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்–அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கூறியது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. இதுபோன்ற தகவல்களால் ஆணையத்தின் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது. உண்மைகள் நிச்சயம் வெளியே வரும்.

தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி அரசு முடிவுக்கு வரப்பட வேண்டும் என்று நான் கூறினாலும் அந்த ஆட்சியில் எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளும் தவறு என்று சொல்லும் மனநிலை கொண்டவன் நான் அல்ல. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கடைசி காலங்களில் ஓ.பன்னீர்செல்வம் அதிக சொத்துக்களை சேர்த்துள்ளார். மூத்த அமைச்சர்களை கொண்டு ஐவர் அணியை ஜெயலலிதா அமைத்தார். அதை பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம் அதிக சொத்துக்களை சேர்த்துள்ளார்.

தை பிறந்தால் வழி பிறக்கும். அதன்படி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் ஆகி விடுவார்கள். அதைத் தொடர்ந்து இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளில் நான் 4 நாட்கள் கலந்து கொண்டுள்ளேன். அது புதிய அனுபவமாக இருந்தது. தொடர்ந்து பார்ப்போம்.

திருப்பூர் மருத்துவ மாணவர் டெல்லியில் இறந்தது குறித்து உரிய முறையில் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசு ஹஜ் பயணத்திற்கு நிதி வழங்க வேண்டும். இஸ்லாமிய மக்களின் அச்ச உணர்வை போக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story