கூடலூரில் வீடு மீது சரக்கு வாகனத்தை தள்ளிய காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு


கூடலூரில் வீடு மீது சரக்கு வாகனத்தை தள்ளிய காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2018 10:00 PM GMT (Updated: 17 Jan 2018 7:26 PM GMT)

கூடலூரில் வீடு மீது சரக்கு வாகனத்தை தள்ளி விட்ட காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

கூடலூர்,

கூடலூர் செம்பாலா, அம்பலக்காடு, ஆனைசெத்தக்கொல்லி பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து முகாமிட்டன. மேலும் அவை குடியிருப்புகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தின. இதனால் காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் போராட்டம் நடத்த போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர். இதனால் முதுமலை யில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு முகாமிட்டு இருந்த ஒரு காட்டு யானையை கோக்கால் மலைக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

அதைத்தொடர்ந்து காட்டு யானை ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் கோக்கால் மலை அடிவாரத்தில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கூடலூர் செம்பாலா பகுதிக்குள் காட்டு யானை நுழைந்தது. பின்னர் கூடலூர்- கோழிக்கோடு சாலையை கடந்து ஈட்டிமூலா பகுதிக்கு வந்தது.

அப்போது சாலையில் மிரண்டு ஓடிய காட்டு யானையை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளுக்குள் ஓடினர். இந்த சமயத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மானுஷ் என்பவரின் சரக்கு வாகனத்தை காட்டு யானை தனது தும்பிக்கையால் தள்ளி விட்டது. இதில் சாலையோர பள்ளத்தில் இருந்த ஜக்கரியா என்பவரின் வீட்டின் மீது சரக்கு வாகனம் விழுந்தது. மேலும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதம் அடைந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அவர்களிடம் வருவாய் துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சேதம் அடைந்த வீடு, சரக்கு வாகனத்தை சரி செய்து கொடுக்க வனத்துறையினர் முன்வந்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் வனத்துறையினர் ஈட்டிமூலா பகுதியில் நுழைந்த காட்டு யானையை வனத்துக்குள் விரட்டி யடிக்கும் பணியை மேற்கொண்டனர்.

இரவு என்பதால் வனத் துறையால் உடனடியாக காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட முடிய வில்லை. இதனால் டார்ச் லைட்டுகளின் உதவியுடன் காட்டு யானை நிற்கும் இடத்தை கண்டறிந்து விடிய விடிய அதை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

விடியற்காலையில் பாடந்தொரை கர்க்கப்பாலி வழியாக ஊசிமலை வனத்துக்குள் காட்டுயானையை வனத் துறையினர் விரட்டியடித்தனர். ஆனாலும் காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story