தொழில் பிரச்சினையில் சமரசம் செய்ய ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ் உதவி கமிஷனர் மீது வழக்கு


தொழில் பிரச்சினையில் சமரசம் செய்ய ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ் உதவி கமிஷனர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jan 2018 4:00 AM IST (Updated: 18 Jan 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான பிரச்சினையில் சமரசம் செய்து வைக்க ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்ட ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் லெட்சுமிகாந்தன். இவர் புத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா மற்றும் சிலருடன் பங்குதாரராக சேர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி விற்பனை செய்து வந்தனர். இதில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக லெட்சுமிகாந்தன் மற்றும் ராஜேஷ்கண்ணா இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து லெட்சுமிகாந்தன் கடந்த ஆண்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து உதவி கமிஷனர் ஸ்ரீதர், இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். அதன்பிறகு ராஜேஷ்கண்ணாவிடம் இந்த பிரச்சினையில் வழக்கு பதியாமல் சமரசம் செய்து வைப்பதாகவும், அதற்கு தனக்கு கமிஷன் தொகையாக ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்கண்ணா திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

உதவி கமிஷனர் மீது வழக்கு

அதன்அடிப்படையில் உதவி கமிஷனர் ஸ்ரீதரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அவர்களது அறிவுரைப்படி, லஞ்ச பணத்தை உதவி கமிஷனர் ஸ்ரீதரிடம் கொடுக்க ராஜேஷ்கண்ணா ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஸ்ரீதர் பணத்தை வாங்கவில்லை. இதனை கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து லஞ்சம் கேட்டதாக போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீதர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் அதிபரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக போலீஸ் உதவி கமிஷனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story